3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மேலும் 4 பேர் இருந்ததால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.
திருவள்ளூர், ஜுன் 15: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், 3 வயது வடமாநிலப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், உரிய நீதி கேட்டும் அப்பகுதி பொதுமக்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்தல்:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர் குடியிருப்பில் நேற்று இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. வாலிபர் ஒருவர் குழந்தைக்குப் பிஸ்கட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அங்கிருந்த முட்புதர் ஒன்றிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட குழந்தை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிநபர் குற்றமா? கூட்டு வன்கொடுமையா?
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மேலும் 4 பேர் இருந்ததால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர். இருப்பினும், இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விவேகானந்தாவிடம் கேட்டபோது, “இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்ல; கைது செய்யப்பட்டுள்ள 19 வயது வாலிபர் மட்டுமே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்:
காவல்துறை தரப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண்…— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 15, 2026
இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இனி எல்லாம் மாறிவிடும் என டயலாக் பேசிய முதலமைச்சரே.. இதுதான் அந்த மாற்றமா?” என்று சாடிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட “சிங்கப்பெண் அதிரடிப்படை” தற்பொழுது எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டை விடுகிறார் முதல்வர்:
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக…
— Udhay (@Udhaystalin) June 15, 2026
இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் – பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் என்று சாடியுள்ளார்.
மேலும் படிக்க: தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
உதவி எண் கூட இல்லாத சிறப்புப் படை எதற்கு?
இச்சம்பவம் குறித்துத் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ள கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார். தமிழக அரசு புதிதாக அமைத்துள்ள சிறப்புப் படையை விமர்சித்த அவர், “தொடர்பு கொள்ள தனியாக ஒரு உதவி எண் கூட இல்லாத சிறப்புப் படையை எதற்காக உருவாக்க வேண்டும்? ஏற்கனவே இருக்கும் உதவி எண்களைப் பயன்படுத்துவதற்கு, மக்களின் வரிப்பணத்தில் தனியாக ஒரு சிறப்புப் படையை அமைத்ததால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.