கல்லூரி மாணவியை இன்ஸ்டாவில் மயக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 இளைஞர்கள் கைது.. கோவையில் பயங்கரம்!!
புகாரைப் பெற்றவுடன் உடனடியாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் தியாகராஜன், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத் தனிப்படையுடன் சேலம் மேச்சேரிக்கு விரைந்தார். குற்றச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கியக் குற்றவாளியான அருணாச்சலம் மற்றும் அவரது நண்பன் சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கோவை, ஜுன் 15: கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியிடம் நட்பாக நடித்து, வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாகப் படம் பிடித்து மிரட்டிய சேலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களைக் கோவில்பாளையம் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பைப் பாதியில் நிறுத்திய அருணாச்சலம், மாணவியிடம் நல்லவன் போல் நடித்து அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
நகையை அடகு வைத்து பணம் கேட்ட மாணவி:
இதற்கிடையே, அந்த மாணவி தனது நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுத் தருமாறு அருணாச்சலத்திடம் கேட்டுள்ளார். நகையை 60 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த அருணாச்சலம், அதில் 30 ஆயிரம் ரூபாயை மட்டும் மாணவியிடம் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தைப் பைக் வாங்கியதற்கான தவணைத் தொகையாக ‘பைனான்ஸ் மேனேஜர்’ பெற்றுக்கொண்டதாகப் பொய் கூறியுள்ளார். மாணவிக்குச் சந்தேகம் வராமல் இருக்க, தனது நண்பரான சந்தோஷ் (கட்டிடத் தொழிலாளி) என்பவரின் அலைபேசி எண்ணை ‘பைனான்ஸ் மேனேஜர் எண்’ எனக் கூறி மாணவியிடம் கொடுத்துள்ளார்.
ஆசை வார்த்தை கூறி நிர்வாண வீடியோ பதிவு:
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த உரையாடல் நாளுக்கு நாள் நெருக்கமாக மாறியுள்ளது. அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி காதலிப்பதாக நம்ப வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வந்த இவர்கள், ஒருகட்டத்தில் மாணவியை ஆடையின்றி வரவழைத்து, அவரது நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைத் தங்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பதிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் தங்களது உண்மையான முகத்தைக் காட்டிய அந்த வாலிபர்கள், அந்தத் தனிப்பட்ட வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியிடம் பணம் கேட்டுப் பறிக்க முயன்றுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தற்கொலை எண்ணத்துடன் விடுதியில் சோர்வாகக் காணப்பட்டுள்ளார்.
விடுதிப் பெண்மணியின் சமயோசிதம்:
மாணவியின் மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த விடுதியில் தங்கியிருந்த பெண்மணி ஒருவர் அவரிடம் விசாரித்தபோது, மாணவி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லியுள்ளார். உடனடியாக அந்தப் பெண்மணி, கோவில்பாளையம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.
இருவரையும் கைது செய்த போலீசார்:
புகாரைப் பெற்றவுடன் உடனடியாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் தியாகராஜன், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத் தனிப்படையுடன் சேலம் மேச்சேரிக்கு விரைந்தார். குற்றச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கியக் குற்றவாளியான அருணாச்சலம் மற்றும் அவரது நண்பன் சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த கோவில்பாளையம் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் – ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது
போலீஸாரின் எச்சரிக்கை:
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் இளம் பெண்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், “சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் அளவுக்கு அதிகமான நெருக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இணைய உலகில் அப்பாவியாகப் பேசும் பெண்கள் இது போன்ற கும்பல்களிடம் சிக்குவது தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெண்கள் மிகவும் ஜாக்கிரதையுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.