‘நான் முதல்வன்’ திட்டம் பெயர் மாறுகிறது.. புதிய வடிவம் பெறுகிறதா தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டம்?
Naan Mudhalvan Scheme Rename: தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், அந்த திட்டத்தின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, தொழில் நுட்பத் திறன், வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், தொழில் வழிகாட்டுதல், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஏராளமான மாணவர்கள் பயிற்சிகள் பெற்று முன்னேறியுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நான் முதல்வன் என்ற திட்டத்தின் பெயர் ” திறன் தமிழ்நாடு” ( டிஎன் ஸ்கில்ஸ்) என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
2022- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம்
கடந்த மே 15- ஆம் தேதியில் இருந்து பதிவிடப்பட்ட பதிவுகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு இப்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலினால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளான கோடிங், ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ஊருக்கு போற ப்ளான் இருக்கா? வார விடுமுறைக்காக 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..




அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
மேலும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சிறந்த எதிர்கால படிப்புகளை தேர்ந்தெடுக்கவும் வழி காட்டப்பட்டு வருகிறது.
திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள்
மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க செய்வதோடு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகளை பெற்று தருவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களுக்கு தங்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில் பாதை பற்றிய சரியான வழிகாட்டுதல்களையும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் பெயரை திறன் தமிழ்நாடு என தமிழக வெற்றிக் கழக அரசு மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: 4 தொகுதிகள் இடைத்தேர்தல்.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு!