கோடை ஸ்பெஷல்.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கம்.. விவரம் உள்ளே..
வண்டி எண்கள் 06043 / 06044 கொண்ட சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில், ஜூன் 20ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் ஜூன் 21ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும்.
ஜூன் 19, 2026: சென்னை முதல் கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தென்னக ரயில்வே தொடர்ந்து பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறைகள் மற்றும் திருவிழா காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில்:
அதன் ஒரு பகுதியாக, ஜூன் 20ஆம் தேதியான நாளை சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மூலம் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வண்டி எண்கள் 06043 / 06044 கொண்ட சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில், ஜூன் 20ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் ஜூன் 21ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஜூன் 22ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதன்மூலம் தென் தமிழக பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கும் கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் வழித்தடம்:
இந்த சிறப்பு ரயிலில் 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 12 படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு தூங்கும் பெட்டிகள், 2 பொதுப் பயணிகள் (ஜெனரல் செகண்ட் கிளாஸ்) பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு அமர்வு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தரப்பு பயணிகளும் தங்களது தேவைக்கேற்ப முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும்.
மேலும் படிக்க: வெள்ளை அறிக்கையில் புதிய தகவல் எதுவும் இல்லை; நிதிநிலை கவலைக்கிடத்தில் உள்ளது – அண்ணாமலை..
இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக கன்னியாகுமரியை சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் தங்களது பயணத் திட்டத்திற்கு ஏற்ப முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.