வெள்ளை அறிக்கையில் புதிய தகவல் எதுவும் இல்லை; நிதிநிலை கவலைக்கிடத்தில் உள்ளது – அண்ணாமலை..
தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய ஒரு ‘செயல்திறன் மிக்க’ ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜூன் 19, 2026: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், வீ தி லீடர்ஸ் நிறுவனருமான அண்ணாமலை, தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதிநிலை குறித்த தமிழக வெற்றிக்கழக அரசின் வெள்ளை அறிக்கையில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவிற்கு புதிய தகவல்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு:
தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற உடனே, தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதித்துறை அமைச்சர் மரிய பெல்சன் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் எவ்வளவு, தனிநபர் மீதான கடன் சுமை எவ்வளவு அதிகரித்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கடன் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
புதிய தகவல் எதுவும் இல்லை – அண்ணாமலை:
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம்…
— K.Annamalai (@annamalai_k) June 19, 2026
இந்தச் சூழலில், வீ தி லீடர்ஸ் நிறுவனரான அண்ணாமலை இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் நிதிநிலை குறித்து தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில் 22.8 சதவீதம், வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் 2021-22ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்தது. 2025-26ஆம் ஆண்டில் அது 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பைக் குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறையில் ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் அமைப்புசார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாநிலத்தின் நிதிநிலை கவலைக்கிடம்:
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031ஆம் ஆண்டிலிருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்..
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய ஒரு ‘செயல்திறன் மிக்க’ ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.