AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்..

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து, யாரும் யாரையும் குறை கூறாமல் நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கானது. அது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கை நிலைப்பாடுகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சினை என்றால் அனைத்து கட்சிகளும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் குறிப்பிட்டு பேசினார்.

மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jun 2026 10:50 AM IST

ஜூன் 19, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். 17ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, ஆர்.பி. சவுத்ரி, கே. ராஜன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்:

அதனைத் தொடர்ந்து, மேகதாது அணை தொடர்பான அரசினர் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய அவர், “காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு தனது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தமிழ்நாடு சட்டப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

எந்த அனுமதியும் மத்திய அரசு வழங்க கூடாது:

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவித அனுமதியையும் வழங்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். எனவே, கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதிய நீர்த்தேக்கத் திட்டங்களை, சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறினார்.

அரசியல் கடந்து ஓரணியில் நிற்க வேண்டும்:

மேலும், “கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து, யாரும் யாரையும் குறை கூறாமல் நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கானது. அது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கை நிலைப்பாடுகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சினை என்றால் அனைத்து கட்சிகளும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என முதலமைச்சர் விஜய் வலியுறுத்திப் பேசினார்.

Follow Us