இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் சி.மகேந்திரன்.. வீரபாண்டியன் காட்டம்!
CPI Secretary Veerapandian Criticizes Mahendran: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான சி. மகேந்திரனை விமர்சித்துள்ளார் சி. பி. ஐ. மாநில செயலாளர் மு. வீரபாண்டியன்.
தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சி. மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் சாதி, மதத்தை தவெக தோற்கடித்துள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன். இந்த கட்சியில் சிகப்பு துண்டு அணிந்தவாறு பணியை மேற்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மகேந்திரன் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த மகேந்திரன் கட்சியின் அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார்.
கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட மகேந்திரன்
அண்மை காலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராகவும், விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, கட்சியின் ஆரம்ப கால தலைவர்களால் உருவாக்கப்பட்டு தற்போது, தமிழகத்தில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பாக வளர்ந்துள்ள நிறுவனத்தை சிலர் குறுக்கு வழியில் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்தனர்.அத்தகைய மோசடி நபர்களுக்கு ஆதரவாக மகேந்திரன் செயல்பட்டு வந்தார்.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!




மகேந்திரன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை
இதன் காரணமாக, மகேந்திரன் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதனால், அவர் கட்சியுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். இருந்தாலும், மீண்டும் கட்சியுடன் இணக்கமாக இருப்பதற்காக மகேந்திரனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், மகேந்திரன் தனது தவறுகளை உணராமல் கட்சியுடன் இணக்கமான போக்கை முன்னெடுக்கவில்லை. இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார்.
கட்சியின் நடவடிக்கை சரியானதாகி விட்டது
அவரது இந்த நடவடிக்கையின் மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரியப்படுத்திக் கொள்கிறது என்று கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் மாநில துணைச் செயலாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், கடந்த 2015- ஆம் ஆண்டு ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு அந்த தேர்தலில் டெபாசிட் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்..