கோவையில் பெரும் பரபரப்பு.. 54 இளநிலை உதவியாளர்கள் டிஸ்மிஸ்.. உயர் நீதிமன்றம் சாட்டையடி உத்தரவு!
Coimbatore Corporation Junior Assistants Dismiss: கோயம்புத்தூர் மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தூய்மை பணியாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எஸ். பி. வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணிகளுக்கு 654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தகுதியானவர்களாக 440 பேர் நேர்முகத் தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், இறுதியாக 54 பேர் தேர்வு செய்யப்பட்டு இளநிலை உதவியாளர் பணியிடங்களி பணி அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோரியும் கருணை அடிப்படையில் 2016- ஆம் ஆண்டு தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்பட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்வு நடைமுறைகளில் பங்கேற்காத இவர்கள் பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு தகுதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஈஸ்வரி உட்பட சுமார் 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் உரிய தகுதி இருந்தும் முறையாக விளம்பரங்கள் செய்யப்படாத காரணத்தால் இளநிலை உதவியாளர் தேர்வில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி செல்வாக்கு காரணமாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் ஒரே நாளில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் சி.மகேந்திரன்.. வீரபாண்டியன் காட்டம்!




54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம்
எனவே, இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக அல்லாமலும், தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமலும் உள்ளாட்சித் துறையில் 54 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முறைகேடுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது நடவடிக்கை
பின் வாயில் வழியாக இந்த பணி நியமனங்கள் நிகழ்ந்துள்ளதால் கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், முறைகேடான பணி நியமனங்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!