தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!
NEET Exam Student Suicide: சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்து வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு கோபிகா என்ற மகள் இருந்தார். இவர், சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதன்படி, கடந்த 2025- ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மாணவி கோபிகா பங்கேற்று இருந்த நிலையில், குறைவான மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், விடா முயற்சி விடாத கோபிகா தொடர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகிற ஜூன் 21- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நீட் மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி கோபிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை
நீட் தேர்வில் நாம் மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார். அப்போது, வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், மகளின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தமிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தூக்கில் இருந்து மாணவி கோபிகாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம்… மக்கள் குறைகளை கேட்டறிந்த சார்-ஆட்சியர்!




கோவை மாவட்டத்தில் மாணவி தற்கொலை
இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி அணு கீர்த்தனா மன அழுத்தம் காரணமாக தனது உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிவிட்டு கடந்த ஜூன் 17- ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் தற்கொலைகள்
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது, சேலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தொடர்ந்து நீட் தேர்வு மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க. . .
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க : அம்மா உணவக இட்லி திருட்டுத்தனமாக விற்பனை.. இரு ஊழியர்கள் பதவி காலி.. நெல்லை நகராட்சி இயக்குநர் அதிரடி!