காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!
M K Stalin Birthday Wishes To Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்தில் பிரதர் என்ற வார்த்தை இடம் பெற வில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பலதரப்பட்டோர் ராகுல் காந்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, ராகுல் காந்திக்கு, மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், எதிர்க்கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
முரசொலியில் ராகுல் காந்தியை விமர்சித்து கட்டுரை
ஏனென்றால், கடந்த 2025- ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிறந்த நாளுக்கு, மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தபோது, அதில், கொள்கை ரீதியான என் சகோதரர் ராகுல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார். இதே போல, கடந்த 2024- ஆம் ஆண்டு தெரிவித்த வாழ்த்திலும், அன்பு சகோதரர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், அண்மையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுலை விமர்சித்து கட்டுரையும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: ஒன்றிணைந்து போராடுவோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில்




பிரதர் என்ற வார்த்தையை தவிர்த்த ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை பிரதர் என்ற வார்த்தையே தவிர்த்து, சாதாரணமாக ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார் இதே போல, மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், அரசியலமைப்பு சட்டத்தின் மீது அர்ப்பணிப்பிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். தமிழக மக்களின் நலன்களுக்கு நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து இருந்தது.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ்
ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திமுக தலைமையிடம் தெரிவிக்காமல் அந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதுடன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பெற்றது. இந்த விவகாரம் மட்டும் இன்றி, திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி காங்கிரஸ் போர் கொடி தூக்கியிருந்தது. இதனால், இரு கட்சிகளிடையே உரசல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே தற்போது ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!