சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!
Premalatha Vijayakanth : தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆளுநர் உரை மீதான பதிலுரையின் போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசுவாரா என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று வியாழக்கிழமை ( ஜூன் 18- ஆம் தேதி) பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இன்று வெள்ளிக்கிழமை 2- ஆவது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்த தேமுதிக பொது செயலாளரும், விருதாச்சலம் தொகுதி எம்எல்ஏவும் ஆன பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் தனி கட்சி தொடர்பாக துதி பாடலும், கட்சி தலைவரை பற்றிய துதி பாடலும் தான் அதிகமாக உள்ளது. கட்சியினர் தங்கள் தலைவரை துதி பாடும் இடம் சட்டப்பேரவை கிடையாது என்பதை உணர வேண்டும். தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அறிவுறுத்தியும், இந்த செயல் நிகழ்ந்து வருகிறது.
கேப்டன் விஜயகாந்த பற்றியும் துதி பாட முடியும்
இந்த நிகழ்வு கவலைக்குரியதாக உள்ளது. அப்படி ஒவ்வொரு கட்சியை பற்றியும், அந்தந்த கட்சிகளின் தலைவர்களை பற்றியும் எவ்வளவோ பேச முடியும். ஏன் தேமுதிகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் பற்றியும் எவ்வளவோ பேசலாம். ஆனால், அது சரியான எடுத்துக்காட்டாக இருக்காது. தமிழக சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதும் நேரலை செய்யப்பட வேண்டும்.
மேலும் படிக்க: சட்டபேரவையில் ஒலித்த ‘இயக்குநர் அட்லி’ பெயர்.. முன்னாள் திமுக VS தற்போதைய தவெக அமைச்சர்கள் காரசார மோதல்!!




சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும்
பொது மக்களின் வரிப்பணத்தில் தான் சட்டப்பேரவை நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்க்க வேண்டும். அதனை அவர்கள் பார்க்காமல் இருந்தால் எப்படி. இந்த விவகாரத்தை அவை தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நான் நிச்சயமாக கொண்டு செல்வேன். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து பதிலுரையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசுவாரா என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறுவது இல்லை. அறைகள் ஓய்வதில்லை என்பது போல தான் தமிழக மக்களின் பிரச்சினைகளும் ஓயாமல் இருந்து வருகிறது. வேலை வாய்ப்பு, தண்ணீர் என அனைத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். மக்களும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஒன்றிணைந்து போராடுவோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில்