ஜனநாயகன் படம் கசிவு விவகாரம்.. அதிரடி வேட்டையில் சைபர் கிரைம்.. முக்கிய நபர் கைது!
Jananayagan Leak Accused Arrested : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னை இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை வெளியிடுவதில் சென்சார் பிரச்சினை ஏற்பட்டது. இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் இந்த படம் வெளியிடுவது தொடர்பாக தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜனநாயகம் முழு படமும் இணையத்தில் கசிந்தது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சென்னை இணைய வழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 18 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தை இணையத்தில் வெளியிட்ட முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் முக்கிய நபர் கைது
இந்த நிலையில், தொழில்நுட்ப தகவல் மற்றும் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியை சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இவருடன் சேர்த்து தற்போது வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்த விவரங்களை காவல்துறை வெளியிட மறுத்துவிட்டது 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் படிக்க: ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி.. இருவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்.. அதிரடி தீர்ப்பு!




உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், படத்தை இணையத்தில் கசிய விட்ட நபர் மற்றும் படத்தை டவுன்லோட் செய்து பார்த்தவர்கள் மற்றும் படத்தை பிறருக்கு அனுப்பியவர்கள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
பட கசிவு விவகாரத்தில் முதல் கட்டமாக 6 பேர் கைது
அதன்படி, முதல் கட்டமாக 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, ஜனநாயகன் படத்தை இணையத்தில் கசிய விட்ட முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், தொடர்புடைய சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குண்டும் குழியுமான சாலை… பிஞ்சு உயிரை காவு கொண்ட பரிதாபம்!