திருச்சி செவிலியர் மாணவி உயரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
Trichy Nursing Student Death: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி உயிரிழப்புக்கு டெக்சாமெதாசோன் மருந்து காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும், உண்ணை தன்மை தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற மாணவி திருச்சியில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் பட்டம் படித்து வந்தார். இவருக்கு, மூக்கில் சதை வளர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, அவருக்கு மே 22- ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக மயக்க மருந்து கொடுத்த நிலையில், திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த குழுவானது தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 4 ஆயிரம் டெக்சாமெதாசோன் உப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
3 நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்பு
இதில், சுமார் 3,700 மருந்துகள் நோயாளிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, 300 குப்பிகள் இருப்பில் உள்ள நிலையில், குறிப்பிட்ட பேட்ச் மருந்து செலுத்தப்பட்ட 3 நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்பு ஏற்பட்டது. இதே போல, அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த மாணவிக்கும் அந்த மருந்து செலுத்தப்பட்டதால் இதயம் பாதிக்கப்பட்டது. எனவே, செவிலியர் மாணவியின் உயிரிழப்புக்கு டெக்சாமெதாசோன் மருந்து காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா? அவரே அளித்த பரபரப்பு விளக்கம்




கிண்டி ஆய்வகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைப்பு
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள வேறு எந்த மருத்துவமனையில் இருந்தும் இது போன்ற பக்க விளைவு புகார்கள் பதிவாகவில்லை. திருச்சி அரசு மருத்துவமனையில் பெறப்பட்ட புகார் குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பை சேர்ந்த சிஹெச் ஐ 60004 மற்றும் டெக்சாமெதாசோன் 8 எம்ஜி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என அறிவித்து அவை மருத்துவமனைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கிடைத்த பின்னர் உண்மை தன்மை தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாமெதாசோன் மருந்தின் விளைவுகள்
டெக்சாமெதாசோன் என்ற மருந்தானது ஒவ்வாமை, வளர்ச்சி போன்ற பாதிப்புகளுக்கும், அறுவை சிகிச்சையின் போதும், அதற்கு பின்னும் செலுத்தப்படுகிறது. செவிலியர் மாணவி உள்பட 3 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு அதிகமான இதயத்துடிப்பு, இதய தசை தளர்வு, இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு மற்றும் இதய செயலிழைப்பால் ஏற்படும் அதிர்ச்சி நிலை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!