தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தேர்வுத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 23, 2026: தலைநகர் டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களுக்கு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளார். “நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை” என எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்வுத்தாள் கசிவு – விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முடிவு:
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தேர்வுத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க முடியாது:
“மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்களது தொடர் நடவடிக்கைகள் தொடர்கின்றன. நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது” என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
தலைநகர் டெல்லியில் சமூக ஊடக தளமான காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
விரைவான விசாரணை – பிரதமர் மோடி அறிவிப்பு:
கடந்த புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் இந்த வழக்குகளில் ஒன்றில்கூட இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தேர்வுத்தாள் கசிவு வழக்குகளில் விரைவான விசாரணை மற்றும் தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திலும் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி கடுமையாகப் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை “கோர பாப்” (மிகப்பெரிய பாவம்) என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு:
தேர்வுத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தலைநகரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மேலும், தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் CJP போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதற்கு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையே நிபந்தனையாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதாக அரசு குற்றம்சாட்டியுள்ளது.