அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி தவெக அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!
TRB Rajaa Latest Speech: தவெக ஆட்சியாளர்கள் அனைத்து விவகாரத்திலும் 6 மாதம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டியாக இருப்பதாக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தொழில் முதலீடு குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்றார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் முதலீடு செய்ய வந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் தவறான அணுகுமுறை காரணமாக ரூ.3 லட்சம் கோடி முதலீடு வேறு மாநிலத்துக்கு சென்றதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக்கழக அரசு பச்சை பொய் கூறி வருகிறது. அனைத்துக்கும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டு பின்னர் அதை பற்றி பேச வேண்டும். திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதாக நினைத்து மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க தவெக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில்துறையினர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திறமையின்மையை பொய் குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சி
இந்த உண்மையை உணரக்கூட திறன் இன்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழகத்தை இழிவுபடுத்தும் செயலாகும். கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு சென்றதாக தவெக அரசு வெளியிட்ட அறிக்கை சிறுபிள்ளைத்தனமான பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்து அடிப்படை புரிதல் இல்லாததை வெளிக்காட்டுகிறது. தொழில் முதலீடுகள் குறித்த இன்றைய ஆட்சியாளர்களின் அறியாமையை வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!




மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் தவெக அரசு
இதில், செமி கண்டக்டர் நிறுவனத்தின் முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை. மத்திய அரசால் திட்டமிட்டு தமிழகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த 2024 மக்களவை தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமாக குற்றசாட்டை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக டெல்லியுடன் தொடர்ந்து போராடி வந்தார். இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை குற்றம் சாட்டுவதன் வாயிலாக தமிழகத்தின் நலனை காவு கொடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தவெக அரசு சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது.
தவெகவின் பொய்களுக்கு புள்ளி விவரமாக பதில்
டொயோட்டா வாகன துறை நிறுவனத்தை பொருத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர். ஆனால், மகாராஷ்டிராவில் முதலீடு செய்வதை தவெக ஆட்சி அமைந்த பின்னரே அறிவித்துள்ளனர். எனவே, தவெகவின் அனைத்து பொய்களுக்கும் என்னால் புள்ளி விவரத்துடன் பதிலளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!