“தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்”.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!
Premalatha Assembly Speech: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்த தீர்மானங்கள் மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் உரையாற்றினார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் எம்பி எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர வேண்டும் என்றும், எம்பிக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலை வரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா ஆகிய இரு முக்கிய விவகாரங்கள் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்குத் தேமுதிக சார்பிலும் பெண்கள் சார்பிலும் தனது முழு ஆதரவைப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!
தமிழ்நாட்டின் எம்.பி-க்கள் எண்ணிக்கை:
சட்டமன்றத்தில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான அதிகாரப்பூர்வ சட்ட முன்வடிவை இதுவரை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். வெறும் மக்கள் தொகையை மட்டுமே காரணியாக வைத்துத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், பிற மாநிலங்களை விடக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்ற அச்சத்தைப் பதிவிட்டார். எனவே, மத்திய மாநில அரசுகள் கலந்து பேசி அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தற்போது தமிழ்நாட்டில் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயர வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார். தற்சமயம் 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற விகிதத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது. தொகுதி மறுவரையறைக்குப் பின் 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற நிலை உருவானால், தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு அறிந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.
விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வை:
தொடர்ந்து பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் குறித்துப் பேசிய பிரேமலதா, ஒரு பெண் உறுப்பினராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் இத்தீர்மானத்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார். முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பெண்கள் மாநாட்டை நடத்திக் காட்டியதையும், பெண்களுக்குச் சீருடை வழங்கி உரிய மரியாதை அளித்ததையும் நினைவுகூர்ந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முதுகெலும்பாக விளங்குவதால், அவர்கள் அரசியலிலும் கோலோச்ச வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 815 ஆக உயர்த்தப்பட்டு, அதில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், பெண் எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டிற்கும் அதிக அளவிலான பெண் எம்பிக்கள் கிடைப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் எனத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும் என்றும், 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.