AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!

Tamil Nadu Assembly Debate: தமிழக சட்டமன்றத்தில் "முதலில் கட்சி மாறியது யார்?", "சட்டைப் பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது?" என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் திமுக எம்.எல்.ஏ ஓ. பன்னீர்செல்வம் இடையே சுவாரசியமாகவும் காரசாரமாகவும் நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சபாநாயகர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

“முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!
ஓபிஎஸ், செங்கோட்டையன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Aug 2026 07:23 AM IST

சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், எப்போதாவது அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் அவையில் நகைச்சுவையையும் அதே நேரத்தில் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கும். அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் இடையே “யார் முதலில் இடம் மாறினார்கள்?”, “சட்டைப் பையில் யாருடைய படம் இருக்கிறது?” என்பது தொடர்பாக நடந்த சுவாரசியமான வார்த்தைப் போர் அவையைச் சூடேற்றியது.

இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

திமுக அரசு மீதான விமர்சனமும் பதிலடியும்:

விவாதத்தைத் தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முதன்மைத் திட்டங்களாகச் சட்டமன்றத்தில் அறிவிக்கவில்லை என்றும், இதனால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து நிற்பதாகவும் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக மக்கள் அனைவரும் பாராட்டும் ஒரு தூய ஆட்சியை ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் திமுக பக்கத்திற்கு இடம் மாறிவிட்டதால், அவ்வாறு ஆளுங்கட்சியைத் துதிபாட வேண்டிய அவசியமில்லை என்றும் மறைமுகமாகச் சாடினார்.

கட்சி மாற்றமும் சட்டைப் பை படமும்:

இதற்குப் பதிலடி கொடுத்த ஓபிஎஸ், சட்டமன்றத்தில் “முதலில் இடத்தை மாற்றியதே நமது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இடம் மாறிய போதிலும் செங்கோட்டையன் தனது இதயத்திற்கு அருகே வைத்திருந்த தலைவரின் நிழற்படத்தை மாற்றவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், ஓபிஎஸ்-ன் சட்டைப் பையைப் பார்க்கும்போது இடமும் மாறி, இதயமும் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது என விமர்சித்தார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பேசிய அதிமுக தரப்பு, “செங்கோட்டையன் இடம் மாறியிருக்கலாம்; ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் படத்தை இன்னமும் தனது சட்டைப் பையில் வைத்திருக்கிறார். ஆனால் அம்மாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-ன் சட்டைப் பையில் இப்போது யாருடைய படம் இருக்கிறது என்பது நாட்டுக்கே தெரியும்” எனச் சாடினர்.

ஓபிஎஸ்-ன் விளக்கமும் சபாநாயகரின் தலையீடும்:

அதிமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய அனைவரையும் தங்கள் இதயத்தில் நிலையாக வைத்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க: திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..

மேலும், “படத்தைக் காட்டி ஏமாற்றுகின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை” என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த விவாதம் எல்லை மீறிச் சென்று காரசாரமாக மாறிய நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு, “இரு தரப்பும் நயமான கருத்துக்களை நகைச்சுவையாகப் பேசிவிட்டீர்கள்” என்று கூறி, விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து பேச அனுமதித்தார்.

Follow Us