அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..
கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உட்கட்சி மாற்றங்கள் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். இன்று தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முன்னிலையில் சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.
ஆகஸ்ட் 11, 2026: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரபூர்வமாக இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுகவைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
மேலும் படிக்க: திமுக – பாஜக கூட்டணி? அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் கிடையாது.. வானதி சீனிவாசன் சூசக பதில்..
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்புகூட எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அதிமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சிங்கை ராமசந்திரன்:
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது… pic.twitter.com/1fePzSvzIe
— Singai G Ramachandran (@SingaiGR) August 11, 2026
இந்தச் சூழலில், கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உட்கட்சி மாற்றங்கள் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அவர் அதிமுகவில் இருந்து விலகிய உடனேயே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு அவரது இணைப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முன்னிலையில் சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். இதன் மூலம் அவரது அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர உள்ளது.
மேலும் படிக்க: தெருக்கள், சாலைகளுக்கு சாதி பெயர்கள்.. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம்..
சிங்கை ராமச்சந்திரன் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். மேலும், அவரது தந்தை சிங்கை கோவிந்தராசு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.