சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 54 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலங்களில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இதனால் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவின் கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், நான்டெட் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில், ஹைதராபாத் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் சார்லபள்ளி – கொல்லம் இடையிலான சிறப்பு ரயில்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 07189, 07193, 07180, 07195, 07197 மற்றும் 07199 ஆகிய ரயில் எண்களில் இந்தச் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 13-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, சபரிமலைக்குச் செல்லத் திட்டமிடும் ஐயப்ப பக்தர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரயில்களின் இயக்க நாட்கள், நேரம், நிறுத்தங்கள் மற்றும் டிக்கெட் இருப்பு விவரங்களை IRCTC இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.