செல்போன் வாங்குவது போல நடித்து சம்பவம்.. ரூ.25 ஆயிரம் செல்போன் நூதன திருட்டு.. கோவையில் பட்டப்பகலில் கைவரிசை!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடையில் செல்போன் வாங்குவது போல நடித்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை 2 மர்ம நபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல நடித்து இரு மர்ம நபர்கள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பிரிவு பகுதியில் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு 2 நபர்கள் வாடிக்கையாளர்கள் போல வந்தனர். அவர்கள், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் அதிக விலை மதிப்புடைய செல்போன்களை காண்பிக்குமாறு தெரிவித்தனர். அப்போது, ரூ. 25,000 மதிப்புள்ள செல்போன்களை கடை ஊழியர்கள் எடுத்து காண்பித்தனர். அதனை, அந்த நபர்கள் கையில் வாங்கி பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
கடை ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள்
அப்போது, இளம் பெண் ஒருவர் கடைக்கு வந்து செல்போன் வேண்டும் என்று கேட்டார். இதனால், அந்த இளம் பெண்ணிடம் கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் எந்த செல்போன் என்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, அந்த இளம் பெண் பல்வேறு செல்போன் வகைகள் குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில், அது தொடர்பாக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்து கொண்டிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பினர்.
மேலும் படிக்க: தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!
ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு
அத்துடன் அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு இரு நபர்களும் ரூ. 25,000 மதிப்புள்ள செல்போனை தாங்கள் கொண்டுவந்த பையில் மறைத்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அந்த மர்ம நபர்களிடம் கொடுத்த செல்போன் குறித்து கடை உரிமையாளருக்கு ஞாபகம் வந்துள்ளது. அதன் பின்னரே, கடையில் உள்ள செல்போன்களை பார்த்ததில், ரூ. 25,000 மதிப்புள்ள செல்போன் திருடி செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சமூகவலைதளங்களி வைரலாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள்
இதைத் தொடர்ந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த இரு மர்ம நபர்களும் நூதனமாக செயல்பட்டு செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த திருட்டு சம்பவம் கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!