உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், எல் நினோ தொடர்பான சுகாதார அபாயங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பான WHO முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக, 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய சுகாதார அபாய மதிப்பீட்டில் இந்தியா அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் வெப்ப அலைகள், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சூழலை எதிர்கொள்ள WHO தனது உள்நாட்டு அவசரகால நடவடிக்கை அமைப்பில் மிக உயர்ந்த நிலையான கிரேடு 3 அவசரநிலை நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளது எல் நினோ காரணமாக இந்தியாவில் முக்கியமாக ஐந்து வகையான சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, அதிகப்படியான வெப்பநிலை காரணமாக வெப்ப பக்கவாதம், நீரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம். இரண்டாவதாக, மழைப்பொழிவு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். மூன்றாவதாக, வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம். பாதுகாப்பற்ற தண்ணீரைப் பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நீர்வழித் தொற்றுகள் பரவும் அபாயமும் உள்ளது. நான்காவதாக, விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுப் பாதுகாப்பு சவால்கள் ஏற்படலாம். ஐந்தாவதாக, இந்தப் பாதிப்புகளால் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது