சீப் மினிஸ்டர் விஜய்.. தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காததே நாம் செய்த தவறு – மு.க ஸ்டாலின் தாக்கு..
MK Stalin Campaign: முதலமைச்சர் விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின், இனிமேல் அவரை “விஜய்” என்று அழைக்காமல் “சீப் மினிஸ்டர்” என்றே அழைப்பேன் எனக் கூறினார். மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தையும் அவர் விமர்சித்தார். தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களுடன் தேநீர் அருந்தியது உள்ளிட்ட விஜயின் நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அக்டோபர் 3, 2026: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இ. பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்றும், தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறும் தேர்தலும் அல்ல; மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் விமர்சித்தார். மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரத்தை குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இந்த இடைத்தேர்தல் அப்பட்டமான குதிரை பேரத்தின் விளைவு என விமர்சித்தார். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் காரணமாகவே ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை தவெக விலைக்கு வாங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காததே நாம் செய்த தவறு:
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை திமுக ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறிய ஸ்டாலின், கொள்கை எதிரிகளுடன் மோதுவதில் கவனம் செலுத்தியதால் தவெகவை கண்டுகொள்ளாமல் விட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக தேர்தல் களத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை திமுக எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: வழிக்காட்டி பலகைகளில் இந்தி எழுத்துக்கள்.. மாநில நெடுஞ்சாலைத்துறை சொன்ன விளக்கம்..
திமுக ஆதரவால்தான் ஆட்சி நடக்கிறது:
தற்போதைய ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் ஆட்சி அமைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் எவ்வளவு பேசினாலும், திமுகவுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளின் ஆதரவால்தான் ஆட்சி நடைபெறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். தினந்தோறும் கொலைகள், அரிவாள் வெட்டுகள் நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். போதைப் பொருட்கள் தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விலைவாசியை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு:
ஆவின் பால் விநியோகம் முதல் விலைவாசி உயர்வு வரை பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்த மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் அன்றாட சிரமங்களை அரசு தீர்க்கத் தவறிவிட்டதாக விமர்சித்தார். தமிழக அரசின் செயல்பாடுகளை கேலி செய்யும் வகையிலும் அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
மேலும் படிக்க: அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..
இனி சீப் மினிஸ்டர் என்று தான் சொல்வேன்:
முதலமைச்சர் விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின், இனிமேல் அவரை “விஜய்” என்று அழைக்காமல் “சீப் மினிஸ்டர்” என்றே அழைப்பேன் எனக் கூறினார். மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தையும் அவர் விமர்சித்தார். தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களுடன் தேநீர் அருந்தியது உள்ளிட்ட விஜயின் நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் விஜய் யாருடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், திமுக வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் என உறுதியளித்தார்.
வாழ்க்கை ஒரு வட்டம் – முதல்வருக்கு நன்றாக பொறுந்தி இருக்கிறது:
ஐந்து நிமிடங்கள் பேசினால் அகிலமே ஆடிப்போகும் என பேசிக்கொண்டிருந்த விஜய், தற்போது ஒரு தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருவதாக ஸ்டாலின் விமர்சித்தார். “வாழ்க்கை ஒரு வட்டம்” என்ற பழமொழியை குறிப்பிட்ட அவர், அது தற்போது முதலமைச்சர் விஜய்க்கு பொருந்தியுள்ளதாகவும் கூறினார்.
அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தொகுதிகளிலும் திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.