அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi Stalin Campaign: தாராபுரம் மக்கள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பதாகக் கூறிவிட்டு வேறு விதமாக முடிவு செய்ததாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், “கடந்த முறை திமுகவுக்கு அல்வா கொடுத்துவிட்டீர்கள்; இந்த முறை அப்படி செய்யாமல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அக்டோபர் 3, 2026: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகன்யாவுக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரம்
இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
கடந்த முறை திமுகவுக்கு அல்வா கொடுத்தீர்கள் – இந்த முறை வாக்களிக்க:
தாராபுரம் மக்கள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பதாகக் கூறிவிட்டு வேறு விதமாக முடிவு செய்ததாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், “கடந்த முறை திமுகவுக்கு அல்வா கொடுத்துவிட்டீர்கள்; இந்த முறை அப்படி செய்யாமல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சத்யபாமா சாதாரண பல்டி பாமா அல்ல – அந்தர் பல்டி பாமா:
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்த உதயநிதி, அவர் சாதாரண “பல்டி பாமா” அல்ல, “அண்டர் பல்டி பாமா” எனக் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பும்போது உரிய பதில்கள் வழங்கப்படாமல் பாடல்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் மட்டுமே நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
முதல்வர் விஜய் மீது தொடர் விமர்சனம்:
முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய உதயநிதி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் விமர்சித்ததாகக் கூறியதுடன், அவரே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோதும் விஜய் அவையில் இல்லாமல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தான் சுமார் 40 நிமிடங்கள் பேசியதாகவும், முதலமைச்சர் விஜயிடம் 18 கேள்விகளை எழுப்பியதாகவும் உதயநிதி கூறினார். ஆனால், அவற்றில் ஒரு கேள்விக்குக்கூட இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் படிக்க: தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! மளமளவென பற்றி எரிந்த தீ..
தமிழகத்தில் மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விமர்சித்த உதயநிதி, தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை விட அவர்களுக்கு வைக்கப்படும் பட்டப்பெயர்களே மக்களுக்குத் தெரியும் என்று கூறினார். “கிரீன்ஸ் போடுபவர்கள், முறுக்கு சுற்றுபவர்கள், உருட்டுக்கட்டை, போதை, திருட்டு விசிடி, பவுடர் அமைச்சர்கள்” என பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி அமைச்சரவையை விமர்சித்தார்.
கட்சி மாறியவர்களை மறக்க மாட்டோம் – அவர்கள் துரோகிகள்:
கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை திமுக ஒருபோதும் மறக்காது எனக் கூறிய உதயநிதி, அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் “பெட்டிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்” என்றும் குற்றம்சாட்டினார். மேலும், சத்யபாமா வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் விஜய் பேசிய விதத்தையும், தாராபுரத்தில் அவரது பிரசார அணுகுமுறையையும் ஒப்பிட்டு விமர்சித்த உதயநிதி, சத்யபாமா பிரசார மேடையில் அழுதது குறித்தும் கேள்வி எழுப்பினார். “அவருக்கு ஓட்டு போட்ட மக்கள்தான் அழ வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.