மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!
Mekedatu Dam New Tribunal: காவிர் ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது மேலும் புதிய சிக்கலை உருவாக்குவதுடன், பேராபத்தை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாக கருதி புதிய நடுவர் மன்றம் அமைக்க முயற்சிக்கும் ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசின் போக்கு மிக தவறான முடிவு ஆகும். புதிய நடுவர் மன்றம் அமைக்கும் இந்த திருத்தத்தை சட்டமன்ற தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் சேர்க்க கோரியது ஏற்புடையது அல்ல.
மேகதாது தீர்மானத்தை திருத்தியது சரியல்ல
அத்துடன், இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று தீர்மானத்தை திருத்தி மீண்டும் இயற்றியிருக்கும் செயல்பாடு ஆகும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கும், எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அடிப்படை தன்மையோ, அக்கறையோ இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதோடு மட்டுமின்றி கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே நடுவர் மன்றம் அமைக்க கோரி கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியதும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் விஜய் கூறி இருப்பதும் கடும் அதிர்ச்சியே ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ’ஒரு ஆக்ஷன் செஞ்சுக்கிறேன்’ – சட்டப்பேரவையில் ஆக்ஷன் செய்து உரையை முடித்த முதல்வர் விஜய்!




நடுவர் மன்றம் பேராபத்தை ஏற்படுத்தும்
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றத்தை நாடினால் அது தற்போது இருக்கும் நிலையே மேலும் மோசமாக்கும். இது பேராபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. எனவே, நடுவர் மன்ற கோரிக்கையை நான் மிக கடுமையாக எதிர்க்கிறேன். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதம் ஆகும். இதை கண்டித்து தஞ்சாவூரில் ஜூன் 27- ஆம் தேதி தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்க உள்ளது.
மேகதாது விவகாரத்தில் புதிய தீர்மானம் வேண்டும்
எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதை எதிர்ப்பதாக கூறி புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரும் முடிவை கைவிட்டு விட்டு, புதிதாக தீர்மானத்தை ஏற்ற வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: கரூர் மரணங்களுக்கு என் மீது பழி போட்டனர் – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு