தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!
Karnataka Cauvery Water : கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 40 டி. எம். சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேகதாது அணை பிரச்னைக்கு நடுவே விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52- ஆவது கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 23- ஆம் தேதி) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர். இதில், தமிழகத்துக்கு ஜூன் 22- ஆம் தேதி வரை வழங்கக்கூடிய 6.7 டிஎம்சி தண்ணீரில் 2.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீர் மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்து விடாத காரணத்தால் 4.07 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ள்து குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் இருப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு
தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர் மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை திறந்து விடாமல் கர்நாடக மாநில அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இடையே நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பற்றாக்குறை காரணமாக தற்போதைய நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!




40 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவு
மேலும், காவிரி ஆற்று படுகையில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் இருப்பு அளவு, காவிரி ஆற்றுக்கு வரும் நீர் வரத்து மற்றும் படுகை மாநிலங்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, கர்நாடக மாநிலத்தில் போதிய மலை பெய்யாதது மற்றும் தங்களது நீர்த்தேக்கங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே நீர்வரத்து இருப்பதை சுட்டிக்காட்டிய அம்மாநில அரசு கூடுதல் தண்ணீரை திறக்க இயலாது என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கான 40 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
கர்நாடகம், தமிழகம் கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இதில், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகாவின் நீர் தேக்கங்களில் இருந்து உடனடியாக திறந்து விடுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!