நாங்க இல்லனா தவெக ஆட்சி அமைத்திருக்க முடியாது… பரபரப்பை கிளப்பிய மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம்!
TVK Government : தமிழகத்தில் இடது சாரி கட்சிகள் ஆதரவு இன்றி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக விவாதம் நடந்ததையடுத்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளின் தயவில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, முதல்வர் ஜோசப் விஜய் தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாங்களே முடிவு எடுத்ததாக இடதுசாரி கட்சிகள் கூறியதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே ஆதரவும் அளித்தோம். ஒருவேளை மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருந்த சூழலில் நாங்கள் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் மே 10- ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற்றிருக்காது. இதை தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமல் ஆகி இருக்கும்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என்பதற்காக
இதன் மூலம், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற கூடாது என்பதற்காக தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றைக் கருத்து உடைய கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் பின் வாசல் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்க முடியாது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தான் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். இது எங்களுடைய நிலைப்பாடு ஆகும் என்று சண்முகம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!




இடது சாரி கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தது. இந்த நிலையில், எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வுக்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவையில், பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து தான் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் தயவால் தவெக ஆட்சி அமைந்துள்ளது
இதேபோல, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை இறுதி கூட்டத்தொடரில் திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்துள்ளதாக மீண்டும் அந்த கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசி இருந்தார். இதற்கு, பதில் அளித்து பேசிய முதல்வர் ஜோசப் விஜய், திமுக தயவால் அல்ல. தமிழக மக்களின் தயவால் தவெக ஆட்சி அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!