AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு”.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!

Edappadi Palaniswamy Assembly Speech: சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் 7.18% எம்பி பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை எதிர்த்த அவர், மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகப் பிரகடனப்படுத்தினார்.

“தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு”.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Aug 2026 12:53 PM IST

சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரங்களும், மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்த விவாதங்களும் தீவிரமடைந்து வருகின்றன. அரசின் சார்பில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீது அதிமுகவின் நிலைப்பாட்டைப் பதிவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசிடம் அதிமுக நடத்திய வலியுறுத்தல்கள் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட உறுதிமொழிகளைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!

7.18% விகிதாச்சாரம் உயர்வு:

சட்டமன்றத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 7.18 சதவீத விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டிற்குப் பாதியாகக் குறையக் கூடாது என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 543 இடங்களில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் கொண்ட இந்த விகிதாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதன் பேரில், அவையில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை நினைவுகூர்ந்தார். இந்த விகிதாச்சாரம் தொடர்ந்தால், தமிழ்நாட்டிற்குத் தற்போதுள்ள 39 எம்பி இடங்களுடன் கூடுதலாக 20 இடங்கள் சேர்ந்து மொத்தம் 59 எம்பி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக வசதிக்கான தேவை:

தொடர்ந்து பேசிய அவர், பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்கள், வட்டங்கள் மற்றும் மாவட்டங்கள் எவ்வாறு நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படுகின்றனவோ, அதேபோல அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளையும் சீரமைப்பதில் தவறு ஏதும் இல்லை என்று விளக்கினார். புதுச்சேரி மாநிலம் முழுமைக்குமே 10.25 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் (20.20 லட்சம்), திருவள்ளூர் (19.60 லட்சம்) போன்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதியிலேயே இரட்டிப்பு வாக்காளர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூரில் மட்டும் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் 7.18% பிரதிநிதித்துவம் குறையாமல் தொகுதி மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

மகளிர் இடஒதுக்கீட்டு வரலாறு:

மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அதிமுகவின் தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வரலாற்றைக் குறிப்பிட்டார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யாத நிலையில், அரசியல் லாபத்திற்காகவும் பரபரப்பை ஏற்படுத்தவும் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தைத் தேர்தல் காரணங்களுக்காக அதிமுக முழுமையாக எதிர்ப்பதாக அறிவித்தார். இருப்பினும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்ற அந்த ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

Follow Us