அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தவறான சிகிச்சை – தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை
Tiruvallur Government Hospital Shock : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு கழிவறையில் இருந்து பிடித்த தண்ணீரை குளுக்கோஸ் பாட்டிலில் நிரப்பி செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தூய்மை பணியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர், செப்டம்பர் 25: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு கழிவறையில் இருந்து பிடித்த தண்ணீரை குளுக்கோஸ் பாட்டிலில் நிரப்பி செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தூய்மைப் பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தவறான சிகிச்சை
பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு தவறான முடிவெடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். இதனையடுத்து அங்கு அவருக்குமுதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிக்க : காலை உணவில் தொடர் சர்ச்சை.. சேமியா கிச்சடி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- பேதி.. நாமக்கல் அரசு பள்ளியில் விபரீதம்!




அங்கு அவருக்கு மூக்கு வழியாக டியூப் பொருத்தப்பட்டிருந்தது. அந்த பாட்டிலில் சோடியம் குளோரைடு கரைசல் நிரப்ப வேண்டிய இடத்தில், கழிவறையில் இருந்து ஜக்கில் தண்ணீர் பிடித்து ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குடும்பத்தினரிடையே தெரிய வர பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை டீன் பாலாஜி தலைமையில் விசாரணை நடந்தது. மருத்துவமனை தூய்மைப் பணியாளர் பழனி என்பவர் இளைஞருக்கு சிகிச்சையளிக்க முயன்றது தெரியவந்தது. அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவமனையின் டீன் பாலாஜி, மருத்துவர்களின் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல், பழனி தன்னிச்சையாக இதைச் செய்திருக்கிறார். விசாரணைக்குப் பிறகு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி இப்படி நடக்காமல் இருக்க, மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களையும் அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ ஊழியர்களைத் தவிர வேறு யாரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலையை மட்டும் செய்ய வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்ர்.
இதையும் படிக்க : குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்? விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை
இந்த நிலையில் ஒரு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் நோயாளியின் சிகிச்சையில் கை வைக்கும் வரை பணியில் இருந்த செவிலியர்களும் மருத்துவர்களும் எங்கே இருந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மருத்துவமனைகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.