மு.க.ஸ்டாலினை ஏளனமாக விமர்சித்தது முதல்வர் பதவிக்கு அழகல்ல.. திருமாவளவன் கண்டிப்பு!
Cm Vijay mocking criticism MK Stalin : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஏளனமாக விமர்சித்திருக்க கூடாது என்றும், இது முதல்வர் பதவிக்கு அழகல்ல என்றார் திருமாவளவன்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை முதல்வர் ஜோசப் விஜய் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:- தமிழக தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை சட்டப்பேரவையில் ஏளனம் செய்யும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசி இருப்பது முதல்வர் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கட்சி மேடைகளில் பேசும்போது தவிர்க்கக்கூடிய வார்த்தைகளை சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். எனவே, வரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும், முதல்வர் எனும் மகத்தான பதவிக்குரிய மாண்பையும் ஜோசப் விஜய் பேணி பாதுகாத்திட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழக வெற்றிக் கழக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.755 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது, அரசு மருத்துவமனைகளில் 56 சதவீதம் குழந்தை பிறப்புகள் பதிவாகி வருகின்றன. மீதமுள்ள 44 சதவீதம் குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கின்றன.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு வெரி குட் நியூஸ்.. இலவச சைக்கிள்களில் புத்தம் புதிய டிசைன்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!




தனியார் மருத்துவமனையை நாடும் மக்கள்
இதில், தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை, எளிய குடும்பத்தினர் தாய் சேய் பாதுகாப்பு கருவி தனியார் மருத்துவமனையே நாடும் நிலை உள்ளது.
ரூ.755 கோடியில் தனியார் மருத்துவமனையை மேம்படுத்தலாம்
எனவே, தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு செலவு செய்யும் ரூ.755 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக உரிய வசதிகள் உடைய பிரசவ வார்டுகளை உருவாக்குவதோடு, தேவையான மருத்துவ பணியாளர்களையும் நியமிப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக அமையும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு கிராம் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே அந்த குழந்தைகளின் விரல்களுக்கு பொருந்தாமல் போய்விடும். எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!