தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!
Tamil Nadu IPS Officers Transfer : தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், 5 கூடுதல் எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர் .
தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், 5 ஏ. எஸ். பி.க்கள் எஸ். பி. க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை காவல்துறையின் நலன் மற்றும் எஸ்டேட் துணை கமிஷனர் ஆக இருந்த கண்ணன் தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர் ஆகவும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த வேல்முருகன் நவீன மயமாக்கல் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் ஐபிஎஸ் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜி. ஸ்டாலின் ஐபிஎஸ் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்
இதேபோல, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி. ரமேஷ் பாபு ஐபிஎஸ் தீவிரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பி. வி. கீதாஞ்சலி ஐபிஎஸ் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த ஆர். ரமேஷ் கிருஷ்ணன் திருப்பூர் வடக்கு துணை ஆணையராகவும், தமிழ்நாடு கமெண்டோ பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த கே. மகேஸ்வரி ஐபிஎஸ் ஆவடி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி? ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு




அடையாறு துணை ஆணையர்
பெருநகர சென்னை கோயம்பேடு துணை கமிஷனர் ஆக இருந்து வந்த ஆர். உதயகுமார் ஐபிஎஸ் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக இருந்து வந்த ஏ.சி. கார்த்திகேயன் அடையாறு துணை கமிஷனர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த குணால் உத்தம் ஷ்ரோட் கோயம்பேடு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு
நாமக்கல் துணை பிரிவு ஏ எஸ் பி- ஆக இருந்து வந்த ஆகாஷ் ஜோஷி திருப்பூர் தெற்கு துணை ஆணையராகவும், மதுரை மாவட்டம் திருமங்கலம் துணை பிரிவு ஏ எஸ் பி யாக இருந்து வந்த அன்சுல் நாகர் திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை பிரிவு ஏ. எஸ். பி. யாக இருந்த அர்பிடா ராஜ்புத் ஐபிஎஸ் சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ். பி. ஆகவும், திருவெறும்பூர் துணை பிரிவு ஏ. எஸ். பி. யாக இருந்த பனவத் அரவிந்த் திருச்சி வடக்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..