காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் பதவி.. தாரகை கத்பட்க்கு அடிக்கும் ஜாக்பாட்.. கட்சி தலைமை முடிவு?
Congress Legislature Party Leader: தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ- ஆக தாரகை கத்பட் நியமிக்க அந்தக் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இதன் பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்தது. அத்துடன் தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இடம் பெற்றதுடன் இரு அமைச்சர் இடங்களை பெற்றது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதில், விஸ்வநாதனுக்கு உயர் கல்வித் துறையும், ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர்
இந்த நிலையில், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை காங்கிரஸ் மேலிடம் தாரகை கத்பட் எம்எல்ஏவுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தி விரும்பினார். ஆனால், கட்சியின் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் மூத்த நிர்வாகிகள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..




5 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒரு பெண்
எனவே, இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள பெண் எம்எல்ஏவான தாரகை கத்பட்டுக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை அந்தக் கட்சி தலைமை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தொகுதிகளின் எம்எல்ஏக்களாக முறையே ஜமால் முகமது யூனுஸ், விஸ்வநாதன், தாரகை கத்பட், பிரவீன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
பெண்ணுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்
இதில், தாரகை கத்பட் மட்டுமே பெண் எம்எல்ஏ ஆவார். மூத்த நிர்வாகிகளான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டசபை தலைவராக தாரகை நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியை ஒரு பெண் எம்எல்ஏ அலங்கரிக்க உள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. 5 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு!