AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

TN Budget Debate: தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர், வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3.11 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். மேலும், நிதி நிலைமை சீரடைந்ததும் அரசின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என அவையில் உறுதி அளித்தார்.

“வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
அமைச்சர் மரிய வில்சன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Aug 2026 14:01 PM IST

சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் விரிவாக பதிலளித்துப் பேசினார். அப்போது, அரசு ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் அண்ணன் சீர் திட்டம் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு நகலெடுக்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், திட்டங்களின் பயன்களை உயர்த்தும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!

வெற்றி வீடு திட்டம் நிதி உயர்வு:

அவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய அரசின் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு வெறுமனே நகலெடுக்கவில்லை என்றும், மக்களின் பயன்பாட்டிற்காக அத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு உதாரணமாக, ‘வெற்றி வீடு’ திட்டத்தின் கீழ் முந்தைய ஆட்சியில் வீடு ஒன்றுக்கு வழங்கி வந்த ரூ.3.11 லட்சம் நிதி ஒதுக்கீட்டை, தற்போதைய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உள்ளதாக அறிவித்தார். மேலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, வருவாய் திரட்டல் மற்றும் செலவின மேலாண்மைக்காக உயர்மட்டக் குழுக்களை அமைத்துள்ளது என்றும், நிதி ஆதாரம் சீரடைந்தவுடன் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.

மகளிர் உரிமைத்தொகை திட்ட ஒப்பீடு:

கடந்த ஆட்சியில் வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை ஒப்பீட்டு ரீதியாக விளக்கிய அமைச்சர், 2021 தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆட்சிக்கு வந்து சுமார் 28 மாதங்கள் கழித்தே (செப்டம்பர் 15, 2023) தொடங்கப்பட்டது என்பதை நினைவூட்டினார். அப்போது மாநிலத்தின் நிதிநிலை சரியாக இல்லை என்ற காரணத்தினாலேயே தாமதம் ஏற்பட்டது எனக் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நிதிநிலையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

முந்தைய ஆட்சி முறைகேடுகள்:

முந்தைய அரசின் மூலதன செலவினங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், முந்தைய ஆட்சியில் மதிப்பீடுகள் அதிகப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டதாகவும், டெண்டர்கள் ஒதுக்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார். அந்த முறைகேடுகளைத் தற்போதைய அரசு ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 2026-27 நிதியாண்டில் மூலதனச் செலவின வளர்ச்சி விகிதம் 11.25 சதவீதமாக உயர்ந்து ரூ.56,985 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் விளக்கிய அமைச்சர், உண்மையான மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை உருவாக்குவதில் தங்கள் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Follow Us