“50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை வரவேற்பதாகத் தவெகவின் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்பி இடங்கள் 50% உயர்த்தப்பட்டாலும் அது வடமாநில ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதால், 543 தொகுதிகளிலேயே உறைநிலையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை, ஆகஸ்ட் 12: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பது தொடர்பான தொகுதி மறுவரையறை விவகாரம் சட்டமன்றத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: “தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு”.. அதிமுகவின் நிலைப்பாட்டை விளக்கிய இபிஎஸ்!!
பணி மற்றும் அமெரிக்க உதாரணம்:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதன்மைப் பணி நாட்டின் சட்டங்களை இயற்றுவதே அன்றி, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைப் போல உள்ளூர் நிர்வாகப் பணிகளைச் செய்வது அல்ல என்று சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, அமெரிக்க ஜனநாயக முறையை உதாரணமாக்கினார். அமெரிக்காவில் மக்கள் தொகை உயர்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றுவதில்லை என்பதை நினைவூட்டினார். உலகிலேயே வலிமையான அயைக் கொண்ட அமெரிக்காவைப் போலவே, புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பிலும் அனைத்து மக்களுக்கும் மாநிலங்களுக்கும் சமத்துவத்தைப் பேணுவதே முதன்மையான நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
முந்தைய எதிர்ப்புகளும் தற்போதைய சூழலும்:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முந்தைய காலங்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பையும், திமுகவின் நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டிய அவர், இதில் தவெக தலைவரும் 2025 முதல் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவித்தார். 50% உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்ற கருத்து வந்தாலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களை ஒன்றிணைத்தாலே, உயர்த்தப்படும் பெரும்பான்மை இடங்களை அவை கைப்பற்றிவிடும். இதனால் இந்தியத் தேர்தல் அரசியலில் மீண்டும் வட மாநிலங்களின் ஆதிக்கம் உருவெடுக்கும் என்று எச்சரித்தார்.
இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!
முதலமைச்சர் தீர்மானத்திற்கு ஆதரவு:
முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் மாநில சுயாட்சியைக் காக்கத் தொகுதி எண்ணிக்கையில் ‘உறைநிலை’ பின்பற்றப்பட்டதைப் போல, தற்போதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் என்பதையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மாநில சுயாட்சியையும் தென் மாநிலங்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் வரும்போது தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் இணைந்து நின்று எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.