அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்.. பறந்த பேப்பர்கள்.. களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்.. நடந்தது என்ன?
இதனால் ஆத்திரமடைந்த திமுக வார்டு உறுப்பினர்களான சிற்றரசு, கவி கணேசன் மற்றும் பரிமலம் உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள், அதிமுக உறுப்பினர் சதீஷை நோக்கி நேரடியாக அடிக்கப் பாய்ந்தனர். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாமன்றத் தீர்மான நகல்களையும் அவர் மீது வீசியதால், அங்கு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
சென்னை, ஜுன் 24: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் போக்கின் காரணமாக அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாமன்றக் கூட்டம் என்பதால், சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் வார்டு உறுப்பினர்கள் நேரடியாக வந்து வெளியே காத்திருந்த நிலையில், பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதையும் படிக்க: “திமுகவின் சரிவு தற்காலிகமானது”.. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூடிய சென்னை மாமன்றம்.. தவெக அரசை சாடிய மேயர் பிரியா!!
மோதலுக்குக் காரணம்:
இக்கூட்டத்தின் கேள்வி நேரத்தில் பல்வேறு வார்டு உறுப்பினர்கள் தங்களது பகுதிகளுக்குட்பட்ட குடிநீர், சாலை மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்துப் பேசி முடித்தனர். இதனைத் தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் அதிமுகவின் 182-வது வார்டு உறுப்பினர் கே.பி.கே.சதீஷ் உரையாற்றத் தொடங்கினார். அப்போது, “நான் எனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச மட்டுமே இங்கு வந்துள்ளேன்; மற்ற கவுன்சிலர்களைப் போல (திமுக கவுன்சிலர்களைக் குறிப்பிட்டு) தலைவர்களைப் புகழ்ந்து பாடுவதற்காக நான் இங்கு வரவில்லை” என்று பேசினார்.
அடிக்கப் பாய்ந்த திமுக உறுப்பினர்:
Clash between DMK and AIADMK councillors during the Chennai Corporation council meeting. pic.twitter.com/p9qjK77ktm
— Vignesh Theni (@Vignesh_twitz) June 24, 2026
இதனால் ஆத்திரமடைந்த திமுக வார்டு உறுப்பினர்களான சிற்றரசு, கவி கணேசன் மற்றும் பரிமலம் உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள், அதிமுக உறுப்பினர் சதீஷை நோக்கி நேரடியாக அடிக்கப் பாய்ந்தனர். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாமன்றத் தீர்மான நகல்களையும் அவர் மீது வீசியதால், அங்கு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகி அவையில் பெரும் கூச்சல் குழப்பம் விளைந்தது.
மேயர் பிரியாவின் அதிரடி உத்தரவு:
இதனைத் தொடர்ந்து அவையில் எழுந்த கடுமையான பரபரப்பைத் தணிக்க சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவர்கள் நேரடியாகத் தலையிட்டார். இரு தரப்பினரையும் அமைதி காக்குமாறு எச்சரித்த மேயர், “மாமன்றத்தில் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அமைதியாக அவரவர் இருக்கைகளில் அமருங்கள்; இல்லையென்றால் அவையை விட்டு வெளியேறி உங்களது வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளுங்கள்” என்று கண்டிப்புடன் கூறினார்.
இதையும் படிக்க: 401 பேருக்குப் பணி ஆணை.. நிறைமாத கர்ப்பிணிக்காக முதல்வர் விஜய் செய்த செயல்.. நெகிழ வைக்கும் வீடியோ!!
மேயரின் இந்த கடுமையான அறிவுறுத்தலுக்குப் பிறகு, இரு கட்சி உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளுக்குத் திரும்பி அமர்ந்தனர். இந்த மோதல் மற்றும் வாக்குவாதத்தால் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் விவாதிக்கப்படுவதற்குப் பதிலாக, கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட இந்த அரசியல் மோதல் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.