AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுகவின் சரிவு தற்காலிகமானது”.. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூடிய சென்னை மாமன்றம்.. தவெக அரசை சாடிய மேயர் பிரியா!!

திமுக தனது வரலாற்றுப் பாதையில் இதுபோன்ற எத்தனையோ தேர்தல் தொய்வுகளையும், வீழ்ச்சிகளையும் கண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னரும் முன்னைவிடப் பிரம்மாண்டமாக இந்த இயக்கம் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. தற்போதைய தேர்தல் பின்னடைவு என்பது முற்றிலும் தற்காலிகமானது என மேயர் பிரியா கூறினார்.

“திமுகவின் சரிவு தற்காலிகமானது”.. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூடிய சென்னை மாமன்றம்.. தவெக அரசை சாடிய மேயர் பிரியா!!
மேயர் பிரியா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Jun 2026 12:12 PM IST

சென்னை, ஜுன் 24: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சுமார் மூன்று மாத கால இடைவெளிக்குப் பின் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தற்போதைய நகர்ப்புறப் பிரச்சினைகள் மற்றும் திமுக கவுன்சிலர்களின் கடமைகள் குறித்து மேயர் பிரியா மிகவும் விரிவாகவும் ஆவேசமாகவும் உரையாற்றினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டம் கூடியதால் மாமன்ற அரங்கில் வழக்கத்தை விடப் பரபரப்பு அதிகமாகக் காணப்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியேறியதை அடுத்து, மாமன்றக் கூட்டத்தில் தங்களுக்கு திமுக உறுப்பினர்களுடன் அமர நடைமுறைச் சிக்கல் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் தங்களுக்குத் தனியிடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: 401 பேருக்குப் பணி ஆணை.. நிறைமாத கர்ப்பிணிக்காக முதல்வர் விஜய் செய்த செயல்.. நெகிழ வைக்கும் வீடியோ!!

ரீல்ஸ் பார்த்து ஏமாந்த மக்கள்:

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கூட்டத்தில் மேயர் பிரியா கடுமையாக விமர்சித்தார். “சென்னையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் துப்புரவுப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகியவற்றால் சென்னை மாநகர மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான ‘ரீல்ஸ்’ வீடியோக்களைப் பார்த்துவிட்டு, உணர்ச்சிவசப்பட்டு மக்கள் தங்களின் ‘ரியல்’ ஆட்சியை (திமுக ஆட்சியை) இழந்துவிட்டோமே என்று இன்று ஒவ்வொரு நாளும் வீதிகளில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நல்லாட்சியைத் தவறவிட்டுவிட்டோம் என்று சென்னை மக்கள் தற்போது வருத்தப்படுகிறார்கள்” என்று மேயர் பிரியா பேசினார்.

திமுகவின் சரிவு தற்காலிகமானதுதான்:

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளைப் புதிய ஆளுங்கட்சியான தவெக கைப்பற்றியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியைத் தனது வசம் வைத்துள்ள திமுக கவுன்சிலர்கள் மத்தியில் ஒருவித சுணக்கம் காணப்பட்டது. இதனை உடைக்கும் வகையில் மேயர் பிரியா பேசியதாவது, திராவிட முன்னேற்றக் கழகம் தனது வரலாற்றுப் பாதையில் இதுபோன்ற எத்தனையோ தேர்தல் தொய்வுகளையும், வீழ்ச்சிகளையும் கண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னரும் முன்னைவிடப் பிரம்மாண்டமாக இந்த இயக்கம் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

தற்போதைய தேர்தல் பின்னடைவு என்பது முற்றிலும் தற்காலிகமானது. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) யாரும் இதைக் கண்டு சோர்வடையவோ அல்லது தங்களது வார்டு கடமைகளில் இருந்து பின்வாங்கவோ கூடாது.

வார்டு உறுப்பினர்களுக்கு 3 முக்கிய கட்டளைகள்:

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் பணிகளும் தொய்வடையாமல் இருக்க கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா சில அவசர உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி, வார்டுகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், தெருவிளக்குகள் பழுதுபார்ப்பு மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய புதிய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் சிறந்த ஆயுதம் நமது ‘மக்கள் பணி’ மட்டுமே. எனவே, மக்கள் உங்களை நாடி வரும்போது எவ்வித அரசியல் சோர்வும் இன்றி உடனுக்குடன் உதவ வேண்டும். கடந்த கால திமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தின் உள்கட்டமைப்புக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் வார்டு வாரியாக மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.

இதையும் படிக்க : கத்தார் ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு..

தவெக – திமுக இடையே அரசியல் மோதல்:

அண்மையில் சென்னையில் நடைபெற்ற அரசுப் பள்ளி விழாக்களில் மேயர் பிரியாவுக்கும், தவெக பெண் எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே ஏற்பட்ட புரோட்டோகால் (Protocol) சர்ச்சைகளின் எதிரொலி இக்கூட்டத்திலும் எதிரொலித்தது. புதிய ஆளுங்கட்சியான தவெக-வின் மக்கள் பிரதிநிதிகள் மாநகராட்சிப் பணிகளில் தலையிடுவது குறித்தும் திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் விவாதங்களை எழுப்பினர்.

இருப்பினும், சென்னை மாநகர மக்களின் நலனே முக்கியம் என்றும், புதிய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியைப் பெற்று வளர்ச்சித் திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்படும் என்றும் மேயர் பிரியா உறுதி கூறினார்.

Follow Us