AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கத்தார் ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு..

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கத்தார் ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jun 2026 20:24 PM IST

ஜூன் 23, 2026: கத்தார் நாட்டில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தார் நாட்டின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள பார்சான் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் தீ விபத்தில்,

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த திரு. பவித் (26), த/பெ. தங்கராஜா, பணகுடி அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்த திரு. சஜித்குமார் (25), த/பெ. முத்துராஜா மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த திரு. சுவின் (24), த/பெ. மைக்கேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கத்தார் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர விபத்து:

ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் பார்சான் எரிவாயு நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மொத்தம் 13 பேர் உயிரிழந்ததுடன், 66-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தார் அதிகாரிகள் மற்றும் இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளன. உயிரிழந்த இந்தியர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணம் குறித்து கத்தார் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரூ. 10 லட்சம் நிதியுதவி:

அத்துடன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசுவை இப்பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

வெளிநாடுகளில் இருந்து தொடர்புக்கு:
+91 80 6900 9900
+91 80 6900 9901

இந்த எண்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Follow Us