கோயில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையையே வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும், கோயிலுக்குள் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
சென்னை, ஜூன் 12 : தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும், கோயிலுக்குள் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
மதுரை கள்ளழகர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோயிலுக்குள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் அரசு நிர்ணயம் செய்த விலையை விட பல மடங்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவது அமைச்சரின் கவனத்திற்கு வந்தது.
இதையும் படிக்க : பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் – செய்தியாளர்களின் பதிலளித்த அமைச்சர்




இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தந்தக் கடைகளில் அரசு அங்கீகரித்த விலைப்பட்டியலை (Price List) பொது மக்கள் காணும் வகையில் பெரிய அளவில் காட்சிப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார். அவரது முன்னிலையிலேயே விலைப்பட்டியல் பலகைகள் பொருத்தப்பட்டன.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை முன்னிறுத்தி அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட முக்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது, “மதுரை கள்ளழகர் கோயிலில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. பக்தர்களின் வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
எனவே, மதுரை கள்ளழகர் கோயிலில் எடுத்தது போன்ற நடவடிக்கையைத் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில் வளாகங்களிலும், தங்கும் விடுதிகள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அனைத்திலும், அரசு அங்கீகரித்த விலைப்பட்டியலைத் தெளிவாகத் தெரியும் வகையில் பக்தர்கள் எளிதில் பார்க்கும் இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த உத்தரவை உடனடியாகச் சுற்றறிக்கையாகத் தயார் செய்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றுவதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டாலோ அல்லது புகார்கள் எழுந்தாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்
அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகைக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் கோயில் கடைகளில் இஷ்டத்திற்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்வதால் ஏழை பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இந்த நடவடிக்கை முறையற்ற விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகங்கள் இனி வரும் காலங்களில் விலை நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.