Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 8 : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குறிப்பாக அக்டோபர் 9, 2026 நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு.. TNEB மின்னகம் சேவை பாதிப்பு.. வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்..




இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 9, 2026 நாளை கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2026 சனிக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11, 12, 2026 ஆகிய 2 நாட்கள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அக்டோபர் 13, 14 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை 2026 அக்டோபர் 8 முதல் 12 வரை, அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. எனினும், 2026 அக்டோபர் 11, 12 தேதிகளில் சற்று உயரக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “பொய்.. பொய்.. முற்றிலும் பொய்!”.. ஜிஎஸ்டி வசூல் குறித்த திமுக குற்றச்சாட்டு.. தவெக கொடுத்த சாட்டையடி பதிலடி!!
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அக்டோபர் 8, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும்.