“GST நம்பர் கொடுத்து போலி பில்.. ரூ.6 லட்சம் சுருட்டல்!”.. கோவையில் நடந்த ஆன்லைன் போலி ஆவண மோசடி!..
Coimbatore Cyber Crime: கோவையில் முன்னணி செல்போன் கடையில் போலி ஜி.எஸ்.டி எண் மற்றும் ஆன்லைன் வங்கி ரசீதை அனுப்பி ரூ.6 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் மற்றும் மின்னணுப் பொருட்களைச் சுருட்டிய உக்கடத்தைச் சேர்ந்த நபரைச் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே 4 மோசடி வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் கைதான சம்பவம் பற்றிய முழு விவரங்கள் இதோ.
கோவை, அக்.08: தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளும் அதிகரித்து வரும் இக்காலத்தில், அதைப் பயன்படுத்திப் புதுவிதமான வழிகளில் மோசடி செய்யும் கிரிமினல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கோவையில் உள்ள முன்னணி செல்போன் கடை ஒன்றைத் தொடர்பு கொண்டு, முன்னணி நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணைக் கொடுத்து, போலி வங்கிப் பணப்பரிவர்த்தனை ஆவணங்களை அனுப்பி ரூ.6 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் ஏ.சி பொருட்களை ஏமாற்றிப் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட உக்கடத்தைச் சேர்ந்த நபரை கோவை மாநகரச் சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க: மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!
ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஆர்டர்:
கோவை நகரில் இயங்கி வரும் பிரபல செல்போன் கடை ஒன்றிற்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தனக்கு உடனடியாக 7 விலை உயர்ந்த செல்போன்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் ஏ.சி உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அப்பொருட்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் பெற்றுக் கொண்ட அவர், அனைத்துப் பொருட்களும் பிடித்து விட்டதாகக் கூறி அவற்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கோவையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரையும் அதன் ஜி.எஸ்.டி எண்ணையும் வழங்கி, அந்த நிறுவனத்தின் பெயரிலேயே ரூ.6 லட்சத்திற்குப் பில் போடுமாறு கூறியுள்ளார். கடை ஊழியர்களும் அவர் கூறிய நிறுவனத்தின் பெயரில் பில் தயாரித்து வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.
போலி ரசீது அனுப்பி பொருட்களைச் சுருட்டிய நபர்:
பில்லைப் பெற்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர், “உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.6 லட்சத்தையும் அனுப்பி விட்டேன்” எனக் கூறி, பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்ட போலி வங்கி ரசீது ஆவணத்தை அனுப்பி வைத்துள்ளார். மேலும், கடை வாசலில் தனது வாகனம் வந்து நிற்கும் என்றும், அதில் பொருட்களை ஏற்றி அனுப்புமாறும் கூறியுள்ளார். அந்த போலி ரசீதை உண்மையானது என நம்பிய கடை ஊழியர்கள், ரூ.6 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களை வந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
வங்கி கணக்கு தணிக்கையில் அம்பலமான மோசடி:
இரவில் கடையை மூடும் முன்பாகக் கடை நிர்வாகத்தினர் அன்றைய நாள் வங்கிப் பரிவர்த்தனைகளைச் சரி பார்த்த போதுதான், அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சம் பணமே ஏறவில்லை என்பதும், அந்த நபர் அனுப்பியது அதிநவீன போலி ஆவணம் என்பதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடை உரிமையாளர் உடனடியாக கோவை மாநகரச் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் செல்போன் எண்களை வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!
4 வழக்குகள் நிலுவையில் உள்ள கிரிமினல் கைது:
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (57) என்பது தெரியவந்தது. அவரை அதிரடியாகக் கைது செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இவர் ஏற்கனவே பல்வேறு கடைகளில் இதேபாணியில் போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததும், இவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமானது. கைதான ஷேக் அப்துல் காதரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.