AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பொய்.. பொய்.. முற்றிலும் பொய்!”.. ஜிஎஸ்டி வசூல் குறித்த திமுக குற்றச்சாட்டு.. தவெக கொடுத்த சாட்டையடி பதிலடி!!

Tamil Nadu GST Collection Allegations: தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 5 சதவீதம் குறைந்துவிட்டதாக திமுக சார்பில் வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக வெற்றி கழகம் (தவெக) காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது. போஸ்ட் செட்டில்மென்ட் ஜிஎஸ்டி வருவாய் 16.1% உயர்ந்துள்ள நிலையில், திமுக உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தவெக சாடியுள்ளது.

“பொய்.. பொய்.. முற்றிலும் பொய்!”.. ஜிஎஸ்டி வசூல் குறித்த திமுக குற்றச்சாட்டு.. தவெக கொடுத்த சாட்டையடி பதிலடி!!
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Oct 2026 13:34 PM IST

சென்னை, அக்.08: தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில், மாநிலத்தின் ஜிஎஸ்டி (GST) வசூல் நிலவரம் குறித்த காரசாரமான விவாதங்களும் குற்றச்சாட்டுகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 5 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகவும், இது மாநிலத்தின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்றும் ஆளும் திமுக அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திமுக சார்பில் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் “அரைவேக்காட்டுப் பிரச்சாரம் மற்றும் அப்பட்டமான பொய்” எனத் தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிக்க: “ஜனநாயகக் குரலை நசுக்கும் செயல்!”.. ராகுல் காந்தி கைதை எதிர்த்து தவெக கடும் கண்டனம்!!

திமுகவின் குற்றச்சாட்டுகளும் ஜிஎஸ்டி கணிப்பும்:

பொதுவாக ஒரு மாநிலத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைகிறது என்றால், அம்மாநிலத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, தொழில்துறை முதலீடுகள் குறைந்துவிட்டன, வணிகர்கள் மற்றும் சிறுகுறு (MSME) நிறுவனங்களின் வர்த்தகம் சரிவடைந்துள்ளது மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பணப்புழக்கம் முடங்கியுள்ளது என்பதே அதன் குறியீடாகப் பார்க்கப்படும். இந்த அமைப்பை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டில் 5% ஜிஎஸ்டி வருவாய் சரிந்துள்ளதாகவும், தொழில்துறை வளர்ச்சி முடங்கியுள்ளதாகவும் திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். இந்த மொத்த ஜிஎஸ்டி தரவுகளை மட்டுமே சுட்டிக்காட்டி திமுக பிரச்சாரம் செய்து வந்தது.

தவெக அளித்த விளக்கமும் பதிலடியும்:

திமுகவின் இந்த விமர்சனங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ள தமிழக வெற்றி கழகம், மொத்த ஜிஎஸ்டி தரவுகளை வைத்து மட்டும் ஒரு மாநிலத்தின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு போன்ற உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த மாநிலங்களில், பிற மாநிலங்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் போது ஐஜிஎஸ்டி செட்டில்மென்ட் உள்ளிட்ட பல காரணிகள் மொத்த ஜிஎஸ்டி கணக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையிலேயே தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய ‘போஸ்ட் செட்டில்மென்ட் ஜிஎஸ்டி’ வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என்று நிதித்துறைச் செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளதை தவெக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..

அம்பலமான அரசியல் காழ்ப்புணர்ச்சி:

மத்திய அரசு வசூலித்து மாநிலத்திற்குத் திருப்பித் தரும் உண்மையான பங்களிப்புத் தொகையான 16.1% உயர்வை மறைத்துவிட்டு, வெறும் 5% மொத்த ஜிஎஸ்டி குறைவை மட்டுமே பேசி மக்களை ஏமாற்ற திமுக முயல்வதாகத் தவெக குற்றம் சாட்டியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வ நிதித் தரவுகள் திமுகவின் இந்த முகமூடியைக் கிழித்து உண்மையைப் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தவெக தெரிவித்துள்ளது. பொய்ப் பிரச்சாரங்களால் ஒருபோதும் உண்மையை வெல்ல முடியாது என்றும், தமிழ்நாட்டின் உண்மையான ஜிஎஸ்டி வளர்ச்சி 16.1% உயர்வோடு வலுவாகவே உள்ளது என்றும் தவெக தனது அறிக்கையில் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளது.

Follow Us