திருப்பரங்குன்றம் சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..
Tiruparankundram Issue: சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு வாதிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 23, 2026: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூண், தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல; அது நில அளவீட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தூண் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவாக வரலாற்று ஆவணங்கள் மற்றும் நவீன அறிவியல் ஆய்வு முடிவுகளையும் சமர்ப்பித்துள்ளது.
800 நில அளவீட்டுத் தூண்கள் இருப்பதாக தமிழக அரசு விளக்கம்!
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் RED ZONE ஆக அறிவிப்பு! மலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூண் ஒரு நில அளவீட்டுத் தூண் என்றும், தமிழகத்தில் இதேபோன்று சுமார் 800 நில அளவீட்டுத் தூண்கள் இருப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலேயர் கால ஆவணங்களில் முக்கிய ஆதாரம்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட நில அளவீட்டு ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை, ‘சிக்கந்தர் நில அளவீட்டு மையம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சூளைமேட்டில் ஹெராயின் விற்பனை: 4 பேர் கைது! 5 செல்போன்கள் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல்
மேலும், திருப்பரங்குன்றம் மலையிலிருந்து நாகமலை, சதுரகிரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெருமாள் மலை உள்ளிட்ட ஏழு நில அளவீட்டு மையங்களுக்கான திசைக் கோணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அளவீடுகளும், தற்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளும் துல்லியமாக ஒத்துப்போவதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை
இதன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு வாதிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஏற்கெனவே அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த சீராய்வு மனு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.