திருப்பரங்குன்றம் RED ZONE ஆக அறிவிப்பு! மலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..
Tiruparankundram Red Zone: தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவம்பர் 23, 2026: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நாளை (நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மலைப்பகுதி முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம்
2026ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவம்பர் 24) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில நாட்களாகப் பெரும் சட்டப் போராட்டமும் அரசியல் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக அப்போது தீபம் ஏற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டாவது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய இடைக்கால உத்தரவு!
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு கடந்த நவம்பர் 20ஆம் தேதி முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர்.
மேலும், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டனர். அதேபோல், ஊர்வலம் நடத்துதல், கோஷங்கள் எழுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு!
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இதற்கிடையே, தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி. விஜய் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.எம். பஞ்சோலி அமர்வுக்கு இன்று அலுவல் இல்லாததால் மனு விசாரணைக்கு வரவில்லை.
திருப்பரங்குன்றம் RED ZONE – ட்ரோன்கள் பறக்கத் தடை!
தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மேலும் படிக்க: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை.. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு, இடைத்தேர்தல் குறித்து விவாதம்..
இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு இன்றும் நாளையும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் – பலத்த போலீஸ் பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மலை அடிவாரம் முதல் மலை உச்சி வரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. இனி காலை 7 மணி முதல் தொடக்கம்..
மேலும், மலைப்பாதை மற்றும் தீபத்தூண் அமைந்துள்ள பகுதிகளைக் கண்காணிக்க 70-க்கும் மேற்பட்ட புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய நவீன முக அடையாளம் காணும் கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் முழுவதும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.