காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்! முதல்வர் விஜய்யிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்!
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன், டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
நவம்பர் 23, 2026: காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்து பயிர்கள் கருகி வருவதால், அப்பகுதியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் தவெக ஆதரவு மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் தலைமையில் 2 மணி நேரம் ஆலோசனைக் கூட்டம்
சென்னை பனையூரில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், தவெக ஆதரவு மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அமமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி காய்ச்சல் காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன், டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததாகவும் கூறினார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில், டெல்டா விவசாயிகளின் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். தனது தொகுதி தொடர்பாக 9 கோரிக்கைகள் அளித்துள்ளதாகவும் கூறினார்.
மாரிமுத்து பேசுகையில், லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகி வருவதால் முதல்வர் நேரடியாக டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறினார்.
குடிநீர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட கோரிக்கைகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லசுவாமி பேசுகையில், வறட்சி பாதித்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்துதல், கன்னியாகுமரியில் பேருந்து வசதிகளை மேம்படுத்துதல், தொழில் வளர்ச்சியை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும் படிக்க: சூளைமேட்டில் ஹெராயின் விற்பனை: 4 பேர் கைது! 5 செல்போன்கள் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல்
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதல்வர் பதில்
இதனிடையே, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்ததாகக் கூறினார். கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அரசு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.