செல்லமாக வளர்த்த நாய் உயிரிழப்பு..லண்டனில் இருந்து பல லட்சம் செலவில் தமிழகம் திரும்பிய இளைஞர்..
தனது தம்பியைப் போல் பாசத்துடன் வளர்த்த செல்ல நாய் உயிரிழந்ததை அறிந்து லோகேஷ் கதறி அழுதுள்ளார். உடனடியாக லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டு வர முடிவு செய்த அவர், பல லட்சம் ரூபாய் செலவு செய்து விமான டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை வந்துள்ளார். அங்கிருந்து நேரடியாக காஞ்சிபுரம் சென்று செல்ல நாயை பார்த்துள்ளார்.
அக்டோபர் 8, 2026: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பழனிராஜ்–ஞானசௌந்தர்யா தம்பதியினர், தங்களது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்ரக நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தனர். அதற்கு “வீரு” என பெயரிட்டு, சொந்தக் குழந்தையைப் போல பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். இவர்களது மகன் லோகேஷும் அந்த நாயை தனது உடன்பிறந்த சகோதரனைப் போல் பாவித்து அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.
10 ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் உயிரிழப்பு:
லோகேஷ் எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துவிட்டு, லண்டனில் பணியாற்றி வருவதுடன், மேற்படிப்பும் படித்து வருகிறார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் செல்ல நாய் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
மேலும் படிக்க: “மேற்கு சென்னை மக்களே ரெடியா?”.. பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம்!!
இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் செல்ல நாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நாய் உயிரிழந்த தகவலை உடனடியாக லண்டனில் இருந்த லோகேஷுக்கு தெரிவித்தனர்.
பல லட்சம் செலவழித்து லண்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த லோகேஷ்:
தனது தம்பியைப் போல் பாசத்துடன் வளர்த்த செல்ல நாய் உயிரிழந்ததை அறிந்து லோகேஷ் கதறி அழுதுள்ளார். உடனடியாக லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டு வர முடிவு செய்த அவர், பல லட்சம் ரூபாய் செலவு செய்து விமான டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை வந்துள்ளார். அங்கிருந்து நேரடியாக காஞ்சிபுரம் சென்று செல்ல நாயை பார்த்துள்ளார்.
மனிதர்களைப் போல இறுதிச்சடங்கு:
லோகேஷ் வருவதற்காக குடும்பத்தினர் செல்ல நாயை பிரீசர் பெட்டியில் வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர். காஞ்சிபுரம் திரும்பிய லோகேஷ், தனது செல்ல நாய் உயிரிழந்ததை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் படிக்க: பராமரிப்பு பணிகள்.. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து..
பின்னர் மனிதர்களைப் போல செல்ல நாய்க்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. 10 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக வளர்த்த நாயின் மீது கொண்ட பாசத்தால், லண்டனில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து இளைஞர் தமிழகம் திரும்பிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.