இன்று 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்சியில் 36.9, ஈரோட்டில் 37, நாமக்கல்லில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 35.6, நுங்கம்பாக்கத்தில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அக்டோபர் 8-ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..
அக்டோபர் 11ஆம் தேதி வரை தொடரும் மழை:
அக்டோபர் 9-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி கோவை மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் இந்த மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தோழி விடுதிகள் குறித்து பாராட்டிய உலக வங்கி குழுமம் – மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..
சென்னையில் மாலை நேரம் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.