தோழி விடுதிகள் குறித்து பாராட்டிய உலக வங்கி குழுமம் – மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..
Mk Stalin On DMK Achievement: அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியில் திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ள இந்த முன்னேற்றங்களை சிறிதளவும் சிதைக்காமல், தற்போதைய அரசும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 7, 2026: திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து இரண்டு முக்கிய செய்திகளை சுட்டிக்காட்டி, அவை நெஞ்சு நெகிழ வைப்பதாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோழி விடுதிகள் குறித்து உலக வங்கி குழுமம் பாராட்டு:
குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட “தோழி” விடுதிகள் குறித்து உலக வங்கிக் குழுமம் வெளியிட்டுள்ள பாராட்டுக் கட்டுரையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “More Than a Roof: How Safe Housing is Unlocking Women’s Path to Education and Jobs in Tamil Nadu” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்வதை ஊக்குவிப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முக்கிய வழியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..
பெண்களின் வேலைவாய்ப்புக்கு பாதுகாப்பான தங்குமிடம்
வாய்ப்புகளைத் தேடி மாநகரங்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாதது வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முக்கிய தடையாக இருப்பதாகவும், அதை தீர்க்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசின் “தோழி” விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும் உலக வங்கிக் குழுமத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மேலும், இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் உலக நாடுகளும் விரைவாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி சாதனை:
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1) https://t.co/m9iLvT1zV6
2) https://t.co/HF7oYSf3mZ https://t.co/TjkdqEr2Uy
— M.K.Stalin (@mkstalin) October 7, 2026
இதேபோல், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சாதனையையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஐந்தில் ஒருவர், அதாவது சுமார் 20 சதவீதம் பேர் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2024-25 கல்வியாண்டை விட, 2025-26 கல்வியாண்டில் ஐஐடி, என்ஐடி, நேஷனல் லா யுனிவர்சிட்டி உள்ளிட்ட முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வான பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 2022ஆம் ஆண்டு 86 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 97.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், தேர்ச்சி பெற்றவர்களில் 85 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சாதனைகளை தற்போதைய அரசு வளர்த்தெடுக்க வேண்டும்”
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியில் திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ள இந்த முன்னேற்றங்களை சிறிதளவும் சிதைக்காமல், தற்போதைய அரசும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.