வரதட்சனை கேட்டு மாமனார்-மாமியார் தொந்தரவு.. ஆபாச படமெடுத்து கணவர் மிரட்டல்.. கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்!
Kerala Dowry Case : கேரள மாநிலத்தில் மனைவியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் அவரது, தாய், தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள நீண்டக்கரா பகுதியை சேர்ந்தவர் நந்து ( 27 வயது). இவர், சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த இளம் பெண் அஞ்சு ( 24 வயது) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 27- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அஞ்சுவுக்கு 25 பவுன் தங்க நகையும், ரூ. 5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த பின்னர் அஞ்சுவின் பெற்றோரிடம் நந்துவும், அவரது பெற்றோரும் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதனிடையே, திருமணம் முடிந்த 1 மாதத்தில் நந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்று விட்டார்.
மருமகளிடன் வரதட்சனை கேட்டு மாமனார்- மாமியார் கொடுமை
வீட்டில் இருந்த நந்துவின் பெற்றோர் மருமகள் அஞ்சுவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக, அஞ்சு கோபித்துக் கொண்டு கொல்லத்தில் உள்ள தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, சவுதி அரேபியாவில் இருந்து கேரளத்துக்கு வந்த நந்து, தனது மனைவி அஞ்சுவை சமாதானம் செய்து சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, சென்ற சில நாட்களில் மனைவி அஞ்சுவை, நந்து கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
மேலும் படிக்க: “எங்களை தொந்தரவு பண்ணான்.. அதான் போட்டோம்” மயிலாப்பூர் ஏசி மெக்கானிக் கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!




சவுதி அரேபியே அழைத்து சென்று கொடூரமாக தாக்குதல்
அவரை பெல்ட், குக்கர், சார்ஜர் ஆகியவற்றால் கொடூரமாக தாக்கியதுடன், அவரது கல்வி சான்றிதழ்களை பறித்து நீ இனிமேல் வேலை செய்து பிழைக்க கூடாது என்று கூறி கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும், மனைவியை அஞ்சுவை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து என்னை மீறி வீட்டுக்கு செல்ல முயன்றால் இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அங்கிருந்து அஞ்சு தப்பித்து கேரளாவில் தனது தாயின் வீட்டுக்கு சென்றார். அவரை பெற்றோர் கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன், மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு
இது தொடர்பாக சவரா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அஞ்சுவின் கணவர் நந்து, மாமனார் தினேஷ், மாமியார் ஜெகதம்பா ஆகிய 3 பேர் மீது போலீசார் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சவுதி அரேபியாவில் இருக்கும் நந்துவை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கணவரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அஞ்சுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!