AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“40 நாட்கள் உழைப்பு வீண்?”.. விபிஜி ராம்ஜி திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாக பெண்கள் போராட்டம்.. அதிகாரிகள் மீது புகார்!

VPG Ramji Scheme Protest: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விபிஜி ராம்ஜி திட்டத்தில் 40 நாட்கள் உழைத்தும் வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்கப்படாமல் மிகவும் குறைத்து வழங்கப்பட்டதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின் முழு பின்னணி இதோ.

“40 நாட்கள் உழைப்பு வீண்?”.. விபிஜி ராம்ஜி திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாக பெண்கள் போராட்டம்.. அதிகாரிகள் மீது புகார்!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Oct 2026 14:23 PM IST

சிவகங்கை, அக்.08: கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும், நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அரசு பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஊரணி வெட்டும் பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட தினசரி ஊதியம் வழங்கப்படாமல் மிகக் குறைவாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு.. TNEB மின்னகம் சேவை பாதிப்பு.. வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்..

40 நாள் உழைப்புக்குக் குறைந்த கூலி:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தில், விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய ஊரணி வெட்டும் பணி கடந்த 40 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்பணியில் ஈடுபட்ட பெண்களுக்குத் தினமும் 360 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தொடக்கத்தில் உறுதியளித்திருந்தனர். கடும் வெயிலிலும் 40 நாட்கள் தொடர்ந்து உழைத்தப் போதிலும், பெண்களுக்கு உடனடியாகச் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் திடீரென ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், வேலை குறைவாகச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வெறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை மட்டுமே கூலியாகக் கணக்கிட்டு வழங்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

முதியவர்கள் குறித்து அவமதிப்பு பேச்சு:

குறைந்த ஊதியம் குறித்து முறையிட்டபோது, “வயதானவர்கள் இருப்பதால் உங்களால் சரியாக வேலை செய்ய முடியவில்லை, முதியவர்களை யார் வேலைக்கு வரச் சொன்னது?” என அதிகாரிகள் அலட்சியமாகவும் மரியாதையின்றியும் பேசியதாகப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதியோர் உதவித்தொகையாகக் கிடைக்கும் 1,200 ரூபாயைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத சூழலில்தான், வயது முதிர்ந்த தாயாரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், 40 நாட்கள் உழைப்புக்கு வெறும் 450 முதல் 600 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் ஏறியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் திரண்டு சாலை மறியலிலும் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: “பொய்.. பொய்.. முற்றிலும் பொய்!”.. ஜிஎஸ்டி வசூல் குறித்த திமுக குற்றச்சாட்டு.. தவெக கொடுத்த சாட்டையடி பதிலடி!!

அதிகாரிகளின் திட்டவட்டமான பதில்:

போராட்டம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தி அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இருப்பினும், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது, ஒரு நாள் திட்டத்தின் கீழ் எவ்வளவு பணி செய்யப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்பவே சட்டப்படி சம்பளம் வழங்க முடியும் என்றும், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வழங்க இயலாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இதனால் சமாதானமடையாத பெண்கள், தங்களுக்கு உரிய முழு ஊதியமும் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us