Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Highlights: ஜூலை 19ல் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

Tamil Nadu news Today 18 July 2025, Highlights: பராமரிப்பு பணிகள் காரணமாக பெருங்குடி, வேளச்சேரி, திருமுல்லைவாயல், போரூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஜூலை 19ம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

C Murugadoss
C Murugadoss | Updated On: 18 Jul 2025 19:05 PM IST
Share
Tamil Nadu News Highlights: ஜூலை 19ல் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை (Rain Update) பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் மழையின் தாக்கம் இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் 12 மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, வானிலை நிலவரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் நிலவி வருகிறது. கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டியும், மதிமுகவில் உட்கட்சி பிரச்னையும் நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. எனவே, தேர்தல் களம் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டு, அவர் சாலையில் நடந்து சென்றதாக கூறப்படும் சம்பவமும், அதன்பிறகு உயர் அதிகாரிகள் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தமிழக்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் மற்றும் இன்றைய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Jul 2025 06:45 PM (IST)

    Chennai Power Cut 19 July: வேளச்சேரி, பெருங்குடியில் ஜூலை19ல் மின்தடை.. உடனே செக் பண்ணுங்க!

    சென்னையைப் பொறுத்தவரை ஜூலை 19ல் பெருங்குடி பகுதியில் அரிஞர் அண்ணா நகர், கெனால் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், ஜெயின் காலேஜ் ரோடு ஆகிய இடங்களில் கரண்ட் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் வேளச்சேரி ஏரியாவில் தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, விஜயா நகர், கங்கை நகர், வேளச்சேரி மெயின்ரோடு, பேபி நகர், தரமணி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் இருக்காது.

  • 18 Jul 2025 06:30 PM (IST)

    திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்தது என்ன? – தாய் கண்ணீர் பேட்டி

    திருவள்ளூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அச்சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை சுட்டுக்கொல்ல வேண்டும் என அப்பெண் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 18 Jul 2025 06:13 PM (IST)

    Chennai Power Cut 19 July: சென்னையில் இங்கெல்லாம் ஜூலை 19ல் மின்தடை

    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை போரூரில் உள்ள அணைக்கட்டுச்சேரி, அமுதூர்மேடு, காவல்சேரி, வயலாநல்லூர், சொரஞ்சேரி, ஆயில்சேரி, சித்தர்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 18 Jul 2025 06:00 PM (IST)

    Edappadi Palanisamy: விவசாயிகளை நேரடியாக சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி

    மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள கீரன்குடி கிராமத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

  • 18 Jul 2025 05:40 PM (IST)

    இலங்கைத் தமிழர் திருமணங்களைப் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு

    இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணங்களைப் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 898 தம்பதியினரின் திருமணங்களைப் பதிவு செய்ய ஜூலை 26 சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகத்தை செயல்பாட்டில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 18 Jul 2025 05:20 PM (IST)

    மதுரையில் கொடூர சம்பவம்.. கணவர் மீது ஆசிரியை வரதட்சணை புகார்

    மதுரையில் ஆசிரியர் ஒருவர் தனது கணவரான காவல்துறையைச் சேர்ந்த பூபாலன் வரதட்சணை கொடுமை செய்வதாக புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மாமனார் எஸ்.ஐ. செந்தில்குமார், மாமியார் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

  • 18 Jul 2025 05:00 PM (IST)

    பழனி தண்டாயுதபாணி கோயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு உண்டியல் காணிக்கை

    பழனி தண்டாயுதபாணி கோயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு உண்டியல் காணிக்கையில் 5,005 கிராம் தங்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி 11,438 கிராம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நடைபெற்றது.

  • 18 Jul 2025 04:20 PM (IST)

    தவெக பொதுச்செயலாளரை சந்தித்த புதுவை முதலமைச்சர்!

    தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது ஆனந்த் முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதன் வீடியோ வைரலாகியுள்ளது.

  • 18 Jul 2025 04:00 PM (IST)

    Tamilisai Soundararajan: அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா? – தமிழிசை கொடுத்த பதில்

    அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்டமான கட்சி தான் என அவர் கூறியுள்ளார்.

  • 18 Jul 2025 03:40 PM (IST)

    முடிவுக்கு வந்த காமராஜர் சர்ச்சை.. விளக்கம் கொடுத்த செல்வபெருந்தகை

    காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிவுக்கு வந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். இதில் டெல்லியில் காமராஜரை கொலை செய்த முயற்சித்த ஆர்.எஸ்.எஸ். வேஷம் போடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

  • 18 Jul 2025 03:20 PM (IST)

    போதைப்பொருள் வழக்கு.. மேலும் 7 பேரை கைது செய்த போலீசார்

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் பகுதியில் மெத் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 18 Jul 2025 03:00 PM (IST)

    MDMK Vaiko: இதற்காகத்தான் திமுகவுடன் கூட்டணி.. வைகோ சொன்ன விளக்கம்

    தமிழ்நாட்டில் பாஜக நுழையக்கூடாது என்பதற்காக தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விழுப்புரத்தில் மதிமுக மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

  • 18 Jul 2025 02:40 PM (IST)

    DMK MP Meeting: உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்… திமுக எம்.பி.,களுக்கு அறிவுரை

    கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நிதி மற்றும் கல்வி உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்பிகளுக்கான கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க

  • 18 Jul 2025 02:20 PM (IST)

    TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு

    2025, ஜூலை 20 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மதுரை மாநில மாநாடு பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

  • 18 Jul 2025 02:00 PM (IST)

    K.C.Veeramani: கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்ததாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளதால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

  • 18 Jul 2025 01:39 PM (IST)

    பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு – 3 பேர் கைது செய்த போலீசார்

    திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் குடிநீர் குழாய்களையும் உடைத்துள்ளனர்.

  • 18 Jul 2025 01:20 PM (IST)

    காட்டு யானைக்கு பழம் கொடுக்க முயற்சி – வனத்துறை அபராதம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைக்கு பழம் கொடுக்க முயன்று நூழிலையில் உயிர் தப்பிய கோபாலகிருஷ்ணன் என்ற நபருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர் பழம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 18 Jul 2025 01:04 PM (IST)

    AIADMK Live News: அதிமுகவை மீட்க ஒன்றிணைய வேண்டும்.. உசிலம்பட்டி எம்.எல்.ஏ அழைப்பு

    2026 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சியமைப்போம் என அவரது ஆதரவு உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை மீட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • 18 Jul 2025 12:44 PM (IST)

    பனை மரத்தின் மரபணு பற்றி ஆராய்ச்சி.. நெல்லை மாணவர் சாதனை

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவரான விஜித் பனை மரத்தின் மரபணு பற்றி நான்கு ஆண்டுகள் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பனைமரத்தின் மரபணுவை ஆய்வு செய்த அவர், 230 கோடி மரபணுக்கள், 32 ஆயிரம் புரதங்களை கண்டறிந்துள்ளார். மேலும் படிக்க

  • 18 Jul 2025 12:24 PM (IST)

    Hosur Sipcot: ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா.. அனுமதி கேட்டு விண்ணப்பம்

    ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல்  அனுமதிக்கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. சூளகிரியில் 1882 ஏக்கரில் ரூ.1003 கோடி செலவில் தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 18 Jul 2025 12:05 PM (IST)

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு.. விண்ணப்பிக்க அழைப்பு

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி ஜூலை 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் http://admissions.pondiuni.edu.in/admissions/index என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 18 Jul 2025 11:45 AM (IST)

    மயிலாடுதுறை டிஎஸ்பி கார் பறிப்பா? – விளக்கம் கொடுத்த மாவட்ட காவல்துறை

    மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுந்தரேசன் என்பவரின் வாகனம் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதாகவும், அவர் அலுவலகம் நடந்து செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் சுந்தரேசன் மேலதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டிய நிலையில் இதனை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் படிக்க

  • 18 Jul 2025 11:30 AM (IST)

    முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்பு சோதனை

    விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யா தற்போது அக்கட்சியில் மகளிரணி மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.

  • 18 Jul 2025 11:10 AM (IST)

    Edappadi Palanisamy: தவெக உடன் கூட்டணியா? – எடப்பாடி பழனிசாமி பதில்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் உத்திகளை இப்போது வெளியில் சொல்ல முடியாது என அவர் பதிலளித்துள்ளார். மேலும் படிக்க

  • 18 Jul 2025 10:50 AM (IST)

    ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை .. பள்ளியை சூறையாடிய மக்கள்

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் 10ம் வகுப்பு மாணவன் கவின் குமார் உடற்கல்வி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளியின் இரண்டு பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் படிக்க

  • 18 Jul 2025 10:35 AM (IST)

    Tirunelveli: இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு கொடுக்காததால் சிறுவன் மீது தாக்குதல்

    திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி கேட்டு கொடுக்காததால் சிறுவனை மூன்று இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க

  • 18 Jul 2025 10:20 AM (IST)

    Tamilnadu Day: தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. முதலமைச்சர் நெகிழ்ச்சி பதிவு

    ஜூலை 18ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 18, 1967: திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்” என நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

  • 18 Jul 2025 09:58 AM (IST)

    உங்களுடன் ஸ்டாலின் வார்டுகள் விவரம்!

    தேனாம்பேட்டை மண்டலத்தில், சூசைபுரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர் தேவாலய வளாகம்
    .வளசரவாக்கம் மண்டலத்தில், மதுரவாயல் பகுதியிலுள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி திருமண மண்டபம் முகாம்
    ஆலந்தூர் மண்டலத்தில், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சனில் உள்ள சமூக நலக் கூடம்

  • 18 Jul 2025 09:43 AM (IST)

    Ungaludan Stalin : முதல் 3 வார்டுகள் என்னென்ன?

    மணலி மண்டலத்தில், மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறும்.

    தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஆர்.வி. நகர் குருமூர்த்தி பள்ளியில் முகாம் நடைபெறும்.

    திருவிக்க நகர் மண்டலத்தில், சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் நடக்கவுள்ளது.

  • 18 Jul 2025 09:23 AM (IST)

    சென்னையில் உங்களுடன் ஸ்டாலின்

    சென்னை மாநகராட்சியில் இன்று 2025 ஜூலை 18 திட்டம் முகாம் 6 வார்டுகளில் நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் உங்களது அடிப்படை ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்

  • 18 Jul 2025 09:00 AM (IST)

    பயணிகள் ரயில்கள் சேவையில் தற்காலிக மாற்றம்

    பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் காரணமாக, அந்த நாளில் இயங்க வேண்டிய சில மின்சார விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு, ஈரோடு நோக்கிச் செல்லும் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Read More

  • 18 Jul 2025 08:46 AM (IST)

    Train Updates : ஜோலார்பேட்டையில் ரயில் ரத்து

    பராமரிப்பு பணிக்காக ஜோலார்பேட்டையில் நாளை ஜூலை 19 அன்று சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. பெங்களூரு மற்றும் ஈரோடு நோக்கி செல்லும் ரயில்கள் சோமநாயக்கன்பட்டி மற்றும் திருப்பத்தூரில் நிறுத்தப்படுகிறது. பயணிகள் முன்னே ஏற்பாடு செய்து பயணிக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது

  • 18 Jul 2025 08:28 AM (IST)

    முன்பு கோவை.. இப்போது ஈரோடு

    தமிழகத்தின் மாவட்ட அளவில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சுஜாதா தொடங்கி வைத்தார்.

    Read More

  • 18 Jul 2025 08:08 AM (IST)

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம்

    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

  • 18 Jul 2025 07:50 AM (IST)

    எந்தெந்த ரயில்களில் இந்த வசதி தெரியுமா?

    அதன்படி, மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631), திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் (20632), சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627), நாகர்கோவில் – சென்னை எழும்பூர் (20628), கோயம்புத்தூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்ட்ரல் – மட்காவ் (20646), மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்ட்ரல் – விஜயவாடா (20677) ஆகிய ரயில்களில் இந்த புக்கிங் செய்து கொள்ள முடியும்

    Read More

  • 18 Jul 2025 07:45 AM (IST)

    8 வந்தே பாரத் விரைவு ரயில்களில் அமல்

    இந்த புக்கிங் வசதி தற்போது 8 வந்தேபாரத் விரைவு ரயில்களில் அமலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், திடீர் பயணத் தேவைகளுக்கும், பயணிகள் நேரத்தை வீணாக்காமல் பயணம் செய்யவும் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

  • 18 Jul 2025 07:27 AM (IST)

    Vande Bharat Train Booking : வந்தே பாரத் புது அப்டேட்

    Southern Railway  புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் ரெயில்களில்    ‘கடைசி நிமிட முன்பதிவு’ வசதி அறிமுகம் (Introducing the ‘last minute booking’ feature) செய்யப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பும் பயணிகள் டிக்கெட்டை பதிவு செய்யலாம்.

  • 18 Jul 2025 07:08 AM (IST)

    கனமழை இருக்கலாம் – வெதர்மேன் கணிப்பு

    அடுத்து வரும் சில நாட்களுக்கு காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    Read More

  • 18 Jul 2025 07:04 AM (IST)

    Chennai Rains : சென்னை வானிலை நிலவரம்!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரப்படி, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  • 18 Jul 2025 07:01 AM (IST)

    Tamil Nadu Weather : இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா?

    தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Published On - Jul 18,2025 7:00 AM