விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? ட்விஸ்ட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. என்ன விஷயம்?
AIADMK TVK Alliance : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் யுக்தி என்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அவர் மறுக்காமல் பதில் அளித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

சென்னை, ஜூலை 18 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் (Tamilaga Vettri Kazhagam Chief Vijay) கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) மறுப்பு தெரிவிக்காமல் பதில் அளித்துள்ளார். மேலும், தேர்தல் யுக்தி வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இதற்கிடையில், கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க அதிமுக முயற்சித்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார்.
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?
அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது” என பதில் அளித்துள்ளார். மேலும், விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜகவா தவெகவா எது வலுவான கட்சி என்று கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக ஒரு தேசியக் கட்சி.
Also Read : ஆகஸ்ட் 25 ஆம் தேதி த.வெ.கவின் இரண்டாவது மாநாடு.. மதுரையில் நடக்கும் என விஜய் அறிவிப்பு..




அது பல மாநிலங்களில் ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. கட்சிகளை நாம் ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்
2024 மக்களவை தேர்தலில் ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து தேர்தல் உத்திகள் வகுக்கப்படுகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும். எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைப்பது அவசியமாகிவிட்டது.
Also Read : விஜயுடன் பயணிப்பது கடினம்.. தனித்து நின்று தான் போட்டி – சீமான்..
2024 மக்களவைத் தேர்தலின் போது இதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை” என தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைக்க தயாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு கற்பனையான கேள்விக்கு நான் எப்படி பதிலளிக்க முடியும்? அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என கூறினார்.